ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் அனைத்து விருந்தினர்களுக்கும் நேரடியாக வழங்கப்பட்டு வருகின்றன.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராம் ஜென்மபூமி அறக்கட்டளை செய்து வருகிறது. அன்றைய தினம் நண்பகல் 12.45 மணியளவில் கர்ப்ப கிரகத்தில் மூலவரான குழந்தை ராமர் சிலை வைக்கப்படுகிறது.இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கும் வகையில், நாட்டின் முக்கிய பிரமுகர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை அழைப்பு விடுத்து வருகிறது.
அழைப்பிதழில் கோவில் மற்றும் ராமர் உருவம் உள்ளது. பெரிய, அழகிய வகையில் வடிவமைக்கப்பட்ட அட்டைகள் தவிர, அழைப்பிதழில் ராம ஜென்மபூமி இயக்கத்தில் ஈடுபட்ட சில முக்கிய நபர்களின் சுருக்கமான விவரங்கள் அடங்கிய சிறு புத்தகமும் உள்ளது. அழைப்பிதழ்கள் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் அச்சிடப்பட்டுள்ளன.
அறக்கட்டளையின் அழைப்பாளர் பட்டியலில் 7,000 க்கும் மேற்பட்டோர் உள்ளனர். அவர்களில் அரசியல் தலைவர்கள், ஆளுநர்கள், தொழிலதிபர்கள், செல்வந்தர்கள், திரை பிரபலங்கள், கிரிக்கெட் நடசத்திரங்கள் அடக்கம்.
விண்வெளி ஆய்வு முதல் கலைகள் வரை பல்வேறு தரப்பு மக்களையும், மறந்து போன பழங்குடியினர் முதல் கட்டிடக் கலைஞர்கள் வரை பல்வேறு தரப்பினரை நாங்கள் அழைத்துள்ளோம். வாழ்க்கையில் முத்திரை பதித்த பலர் அழைக்கப்பட்டுள்ளதாக என்று கோயில் அறக்கட்டளை மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
ராமர் கோவில் இயக்கத்தின் போது உயிரிழந்த 50 கரசேவகர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அறக்கட்டளை பொதுச் செயலர் சம்பத் ராய் தெரிவித்தார்
எங்களிடம் தன்னார்வலர்களின் மிகப்பெரிய நெட்வொர்க் உள்ளது. ஒவ்வொரு விருந்தினரும் அழைப்பிதழ் அட்டையை நேரடியாக பெறுவார்கள், தபால் அல்லது கூரியர் டெலிவரி சேவை மூலம் அல்ல” என்று கோயில் அறக்கட்டளை உறுப்பினர் கூறினார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. கோவில் அறக்கட்டளை மூத்த பிரதிநிதி ஒருவரால் அழைப்பிதழ் இருவருக்கும் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராம ஜென்மபூமி-பாபர் மசூதி வழக்கின் எதிர்மனுதாரரான இக்பால் அன்சாரி, ஜனவரி 5ஆம் தேதி கும்பாபிஷேக விழாவிற்கான அழைப்பைப் பெற்றார். அறக்கட்டளை பிரதிநிதி ஒருவர் அதை அயோத்தியில் ராமர் பாதைக்கு அருகில் உள்ள கோட்டியா பஞ்சிடோலாவில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று நேரடியாக வழங்கினார்.
வெளிநாட்டு விருந்தினர்களுக்கு அழைப்பிதழ் நேரடியாக வழங்கப்படும் எனவும், இந்தியாவில் உள்ள எங்கள் நெட்வொர்க்கைப் போலவே, வெளிநாடுகளிலும் தன்னார்வத் தொண்டர்கள் உள்ளனர். நாங்கள் அவர்களுக்கு இந்தியாவில் இருந்து அழைப்பிதழை அனுப்புவோம், பின்னர் பிரதிநிதிகள் அதை விருந்தினர்களுக்கு நேரடியாக வழங்குவார்கள் என அறக்கட்டளை நிர்வாகி தெரிவித்தார்.