தமிழகத்தில் அதானி குழுமம், துறைமுகங்கள், தளவாடங்கள், சமையல் எண்ணெய், மின் பரிமாற்றம், எரிவாயு விநியோகம், துள்ளிய டேட்டா சென்டர், பசுமை ஆற்றல் மற்றும் சிமென்ட் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கால் பதித்து வருகிறது.
இந்த நிலையில், உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பு 2024- சென்னையில் நடைபெற்றது. இதில், அதானி குழுமம் தமிழ்நாடு அரசுடன் ரூ. 42,700 கோடிக்கு மேல் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
அடுத்த 5 முதல் ஆண்டுகளில் அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் மூலம் ரூ. 24,500 கோடி முதலீடு செய்ய உள்ளது.
அதானி கானெக்ஸ், வரும் 7 ஆண்டுகளில் ஹைப்பர் ஸ்கேல் டேட்டா சென்டரில் ரூ. 13,200 கோடியும், அம்புஜா சிமெண்ட்ஸ் அடுத்த 5 ஆண்டுகளில் 3 சிமெண்ட் அரைக்கும் யூனிட்களில் ரூ.3,500 கோடியும், அதானி டோட்டல் கேஸ் லிமிடெட் 8 ஆண்டுகளில் ரூ. 1,568 கோடி முதலீடு செய்ய உள்ளது.
இதன் மூலம் பல ஆயிரம் பேருக்கு நேரடியாகவும் மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என அதானி நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின், மாநில தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் நிர்வாக இயக்குநர் கரண் அதானி, கேபினட் அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளின் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
திமுகவின் பிரதான கூட்டணிக் கட்சியான காங்கிரஸ், தினமும் காலை முதல் இரவு வரை அதானியையும், அவரது நிறுவனத்தையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. குறிப்பாக, மக்களவையில் ராகுல் காந்தி விமர்சனம் செய்தார். அதன் காரணமாகவே அவரது எம்பி பதவிக்கு வேட்டு விழுந்தது.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மிகவும் நெருக்கமான கூட்டணியான திமுக, அதானிக்குச் சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்துள்ளது. இதன் மூலம், மாநில வளர்ச்சிக்கு அதானியும், அவரது நிறுவனமும் உறுதுணையாக இருப்பது அம்பலத்திற்கு வந்துள்ளது.
குறிப்பாக, ராகுல் காந்தியின் கருத்தை திமுக புறம் தள்ளிவிட்டதாக இந்த நிகழ்வுகள் அம்பலப்படுத்தியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.