நிவாரண நிதி முறைகேடு வழக்கு தொடர்பாக, கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், முதல்வரின் பேரிடர் நிவாரண நிதியில் கேரள முதல்வர் பினராயி விஜயனும், அவரது அமைச்சரவை சகாக்களும் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.
இதுகுறித்து, கேரளாவைச் சேர்ந்த ஆர்.எஸ்.சசிகுமார் என்பவர், அம்மாநில லோக் ஆயுக்த நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அம்மனுவில், “முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அவரது அமைச்சரவையில் இடம்பெற்ற 18 அமைச்சர்கள், தங்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தி, முதல்வர் நிவாரண நிதியைத் தனிப்பட்ட நலன்கள் மற்றும் ஊழல் நோக்கங்களுக்குப் பயன்படுத்தி இருக்கிறார்கள். ஆகவே, முதல்வர் மற்றும் அமைச்சர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சிரியாக் ஜோசப், பாபு மேத்யூ பி.ஜோசப், ஹருண் உல் ரஷீத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடந்து வந்தது. விசாரணை முடிவில், கடந்த ஆண்டு நவம்பர் 13-ம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள் அளித்த உத்தரவில், “பேரிடர் காலத்தில் முதல்வர் தரப்பு எடுத்த சில முடிவுகள் தன்னிச்சையாக இருந்தாலும், அவை அரசியல் உள்நோக்கத்துடன் மட்டுமே எடுக்கப்பட்டவை என்பதைத் தீர்மானிக்க போதிய ஆதாரங்கள் இல்லை. மேலும், புகார்தாரரால் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை” என்று கூறி, மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
ஆனால், லோக் ஆயுக்த நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக கேரள உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை சசிக்குமார் தாக்கல் செய்தார். இந்த மனு, தலைமை நீதிபதி ஏ.ஜெ.தேசாய், நீதிபதி வி.ஜி.அருண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மேற்கண்ட மனு மீது விளக்கமளிக்குமாறு, கேரள முதல்வர் பினராயி விஜயன், அவரது முன்னாள் அமைச்சரவை சகாக்கள் 18 பேருக்கு நோட்டீஸ் பிறப்பித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.