தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், இன்று போகி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்னையில் பழை பொருட்கள் தீயிட்டு எரிக்கப்பட்டதால், கடும் புகை மூட்டம் ஏற்பட்டது
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், மார்கழி மாதம் கடைசி நாள் போகி பண்டிகையாகும். இந்நாளில் பழையன கழித்து புதியன புகவேண்டும் என்பதற்காக போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு போகி பண்டிகையான இன்று சென்னையில் அதிகாலை உற்சாகமாக மேளம் அடித்து பழைய மற்றும் தேவையற்ற பொருட்களை மக்கள் தங்கள் வீட்டு வாசலில் தீயிட்டு கொளுத்து பண்டிகை கொண்டாடினர்.
இதனால் சென்னை காற்று மாசால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. பனிமூட்டமும் புகையும் சேர்ந்து சாலைகள் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தன. முன்னே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு சென்றனர்.
இன்று காலை 7 மணி நிலவரப்படி அரும்பாக்கத்தில் காற்று தர குறியீடு 200ஆக உயர்ந்திருக்கிறது.
அதிகபட்சமாக சென்னை ராயபுரம், எண்ணூர் காந்தி நகர், புழல் இன்டாக் நகர் உள்ளிட்ட இடங்களில் 400 என்ற அபாயகர அளவை காற்று மாசு கடந்தது.
அந்தோணி பிள்ளை நகர், கொடுங்கையூர், கொரட்டூர், பெருங்குடி, பொத்தேரி உள்ளிட்ட இடங்களில் காற்று மாசு 300யை கடந்தது.
ஆலந்தூர், அரும்பாக்கம், நீலாங்கரை, அடையாறு, திருவல்லிக்கேணி, எண்ணூர், துரைப்பாக்கம், தியாகராயர் நகர், அசோக் நகர் உள்ளிட்ட இடங்களில் காற்று மாசு அளவு 200யை கடந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.