பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளைக் குறிவைத்து ஈரான் நடத்திய தாக்குதலுக்கு, பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரான் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தி உள்ளது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் சூழல் உருவாகி உள்ளது.
பாகிஸ்தானை தலமாகக் கொண்டு பல்வேறு தீவிரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகிறது. இந்த தீவிரவாத அமைப்புகள் உலகின் பல நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. அண்டை நாடுகளுக்குள் புகுந்து பல அசம்பாவித சம்பவங்களை இந்த தீவிரவாத அமைப்புகள் செய்து வருகிறது.
அந்தவகையில், பாகிஸ்தானை தலமாகக் கொண்டு இயங்கி வரும், ஜெய்ஸ் அல் அடில் என்ற தீவிரவாத அமைப்பு ஈரானுக்கு பல அச்சுறுத்தல்களைக் கொடுத்து வந்தது. ஈரானின் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து தாக்குதலையும் நடத்தி வந்தது.
இதனை அடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை, பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஸ் அல் அடில் என்ற தீவிரவாத அமைப்பு தொடர்புடைய இரண்டு இடங்களைக் குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது. ஏற்கனவே, ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள தீவிரவாத இலக்குகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்திய நிலையில், பாகிஸ்தானின் உள்ள தீவிரவாத அமைப்பைக் குறிவைத்தும் ஈரான் சரமாரி தாக்குதலை நடத்தி உள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளைக் குறிவைத்து ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரான் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈரானில் உள்ள பலுச் பிரிவினைவாத முகாம்களைக் குறிவைத்து பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தி உள்ளது. இதனால், ஈரானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.
இதற்கிடையே, பாகிஸ்தான் மீது ஈரான் நடத்திய தாக்குதல்கள் தொடர்பாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஜெய்ஷ்வால் பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, இது ஈரானுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான பிரச்னை. இதில், இந்தியாவைப் பொறுத்த வரையில், தீவிரவாதத்தை ஏற்றுக்கொள்ளாது. மேலும், நாடுகள் தங்கள் தற்காப்புக்காக எடுக்கும் நடவடிக்கைகளை நாங்கள் புரிந்துகொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.