ஈரான் சென்றிருக்கும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம், அந்நாட்டு அதிபர் இப்ராஹிம் ரெய்சி, இஸ்ரேல் – ஹமாஸ் போரை முடிவுக்குக் கொண்டு வர உதவும்படி கோரிக்கை விடுத்திருக்கிறார்.
பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி திடீரென ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இதற்கு, அன்றிலிருந்து இன்றுவரை இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது.
அதேசமயம், இப்போரில் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஈரான் நாடு ஆதரவு தெரிவித்திருக்கிறது. எனவே, அந்நாட்டின் ஆதரவு பெற்ற ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹௌதி கிளர்ச்சியாளர்கள், இஸ்ரேலுக்குச் செல்லும் எண்ணெய்க் கப்பல்கள் மற்றும் சரக்குக் கப்பல்கள் மீது செங்கடல் பகுதியில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இத்தாக்குதலில் அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளின் கப்பல்கள் சேதமடைந்தன. ஆகவே, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஹௌதி கிளர்ச்சியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். எனினும், எச்சரிக்கையையும் மீது ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் ஹௌதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்காக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஈரானுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
தொடர்ந்து, ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி உள்ளிட்டோரை ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு குறித்து பேசிய ஜெய்சங்கர், “செங்கடல் பகுதி நிலவரம் பன்முகத்தன்மை கொண்டது. கடற்கொள்ளையர்கள் பிரச்சனை, ஏவுகணை தாக்குதல் ஆகியவை முக்கியமான மற்றும் தீவிரமான பிரச்சனை.
செங்கடல் வழியாக இயக்கப்படும் சரக்குக் கப்பல்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன. இதன் காரணமாக, எரிபொருள் உள்ளிட்டவற்றின் விலைகள் கடுமையாக உயர்ந்திருக்கின்றன. இதனால், இந்தியாவுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது” என்று கூறியிருக்கிறார்.
அதேபோல, ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “இந்தியா – ஈரான் இடையேயான உறவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்ந்திருக்கிறோம். காஸாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களை நிறுத்தி, மனிதநேய அடிப்படையில் பாலஸ்தீனியர்களுக்கு உதவிகள் கிடைக்க வேண்டும்.
அந்த பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பு நிலவ வேண்டும். இந்த விஷயத்தில் தலையிட்டு தகுந்த தீர்வு காண்பதில் இந்தியா முக்கியப் பங்காற்ற வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.