சென்னையில் இருந்து ஸ்ரீரங்கம் சென்ற பிரதமர் மோடி, ரெங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம், ஆழ்வார்கள் பாடிய 108 வைணவ தலங்களில் முதன்மையானதும் தலைசிறந்ததாகவும் கருதப்படுகிறது.
21 கோபுரங்களும் 156 ஏக்கர் பரப்பளவும் கொண்டஇந்த பிரம்மாண்ட கோவில் உலகின் இரண்டாவது பெரிய கோவில் என்று சொல்லப்படுகிறது.
முதலில் சோழ மன்னன் தர்மவர்மனால் கட்டப்பட்டதாகவும், காவேரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது இந்த கோவில் மணலால் மூடிப்போனதாக கூறப்படுகிறது. பின்னர், முற்கால சோழ மன்னர் கிள்ளிவளவன் கோவில் வளாகத்தை மீண்டும் கட்டியுள்ளார்.
வைணவ ஆலயங்களிலேயே 322 நாட்கள் திருவிழா நடைபெறும் ஒரே கோவில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் தான் என்று பக்தர்கள் கூறுகின்றனர். உலகில் பல்வேறு இடங்களில் இருந்து வைகுண்ட ஏகாதசி நாட்களில் மட்டும் சுமார் 10 லட்சம் பக்தர்கள் இங்கே தரிசனத்திற்காக வருகின்றனர். கலாச்சாரம் பண்பாடு மாறாமல் இந்த கோவில் இருப்பதால் 2017ஆம் ஆண்டு யுனெஸ்கே (UNESCO) அமைப்பு விருது வழங்கி சிறப்பித்துள்ளது.
இந்நிலையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். திருச்சி விமான நிலையத்தில் இருந்து காலை 10.45 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி ஸ்ரீரங்கம் சென்றார். பஞசகரையில் இருந்து கோவிலுக்கு சென்ற வழியில் திரண்டிருந்த பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் பிரதமர் மோடிக்கு மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சென்ற பிரதமருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் ராமானுஜர், சக்கர்த்தாழ்வார் உள்ளிட்ட சன்னதிகளில் அவர் தரிசனம் செய்தார். பின்னர் கோயில் மண்டபத்தில் தமிழறிஞர்கள் பாடிய கம்பராமாயணத்தை அவர் கேட்டார்.