அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நிகழ்ச்சி நிரல் குறித்து விரிவாக பார்க்கலாம்.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது. ராமர் கோவில் பாரம்பரிய நாகரா பாணியில் கட்டப்பட்டுள்ளது. இதன் நீளம் (கிழக்கு-மேற்கு) 380 அடி; அகலம் 250 அடி மற்றும் உயரம் 161 அடி. இது மொத்தம் 392 தூண்களால் தாங்கப்பட்டு 44 கதவுகளைக் கொண்டுள்ளது.
கோவிலின் தூண்கள் மற்றும் சுவர்கள் தெய்வங்களின் சிற்பங்களை காட்சிப்படுத்துகின்றன. கோவிலின் தரைத்தளத்தில் உள்ள பிரதான கருவறையில், குழந்தை ராமர் சிலை வைக்கப்பட்டுள்ளது.
பிரான் பிரதிஷ்டைக்கான சடங்குகள் ஜனவரி 16 ஆம் தேதி சரயு நதியிலிருந்து தொடங்கியது. இது இன்று பிற்பகல் அபிஜீத் முஹூர்த்தத்தில் நிறைவடையும் என்று ராமர் கோவில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.மைசூரைச் சேர்ந்த அருண் யோகிராஜ் என்பவரால் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
கும்பாபிஷேக விழாவையொட்டி அயோத்தியில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது, 10,000 சிசிடிவி கேமராக்கள் மற்றும் ஏஐ ஆளில்லா விமானங்கள், சாதாரண உடையில் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விழா மதியம் 12:05 மணிக்குத் தொடங்கும் என்றும், மதியம் 1 மணிக்குள் முடிவடையும் என கோயில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து பிரதமர் உரையாற்றுகிறார்.மேலும் புராதன சிவன் கோவில் புனரமைக்கப்பட்ட குபேர் திலாவிற்கும் பிரதமர் மோடி சென்று பூஜை நடத்துகிறார்.
* ராமர் கோவில் கும்பாபிஷேக விழா மதியம் 12.05 மணிக்கு துவங்குகிறது
*மதியம் 12.30 முதல் 12.45 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
* இதில் 12.29 நிமிடம், 8 வினாடி முதல் 12.30 நிமிடங்கள் 32 வினாடிகள் தான் மிக நல்ல நேரம்;
* இந்த நேரத்தில் குழந்தை ராமர் சிலைக்கு பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
* இந்த நேரம் தான் மிகவும் முக்கியமானதாகும்; இந்த நேரத்தில் தான் பிரதமர் மோடியும் கோவிலில் சடங்குகள் செய்ய உள்ளார்.