அயோத்தி ராமர் கோவிலில் பாலராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
அயோத்தி ராமர் கோவில் பாலராமர் சிலை பிரதஷ்டை விழா இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தரப்பிரதேச ஆளுநர்ஆனந்திபென் படேல் , முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது குழந்தை ராமர் சிலையின் பாதத்தில் மலர் வைத்து பிரதமர் மோடி வணங்கினார். இதனைத்தொடர்ந்து பால ராமர் சிலையின் கண்களில் கட்டப்பட்டிருந்த துணிகள் அகற்றப்பட்டன. பின்னர் தீபாரதனை காண்பித்து பிரதமர் மோடி வழிபட்டார்.
பால ராமர் சிலை 51 அங்குலம் உயரம் கொண்டது. 4.25 அடி உயரம் கொண்ட இந்த குழந்தை ராமர் சிலையின் அகலம் 3 அடி. மொத்த எடை 1.5 டன். மூலவர் சிலை ராமரின் வயது 5. மூலவரின் தோற்றம் பரந்த நெற்றி, வசீகரமான கண்கள், நீண்ட கைகளைக் கொண்டுள்ளது.
சிலை வடிவமைக்கப்பட்ட கல்லானது, கர்நாடகத்தின் கருப்பு பாறைகளிலிருந்து செதுக்கப்பட்டது. ராமர் சிலையின் அடித்தளமானது தாமரையில் ராமர் நிற்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட குழந்தை ராமரின் சிலையின் பீடம் 3 அடி உயரத்தைக் கொண்டது.
முன்னதாக அயோத்திக்கு சென்ற பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர் மீது பூ மழை தூவி உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. அயோத்தி விமான நிலையத்தில் முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்திபென் படேல் மோடியை வரவேற்றனர்.