பொதுமக்களை தூண்டி விடுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய காவல்துறைக்கு பரிந்துரை செய்திருப்பதாக அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா கூறியிருக்கிறார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியின் எம்.பி.யுமான ராகுல் காந்தி, பாரத் ஜோடோ நியாய யாத்திரை என்கிற பெயரில் புதிதாக ஒரு யாத்திரையை வடகிழக்கு மாநிலங்களில் தொடங்கி இருக்கிறார். மணிப்பூரில் தொடங்கிய இந்த யாத்திரை தற்போது அஸ்ஸாமில் நடைபெற்று வருகிறது.
இந்த சூழலில், நேற்று அயோத்தி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றதால், ராகுல் காந்தியின் யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டது. இதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல, அஸ்ஸாமில் உள்ள பல்கலைக் கழகத்திற்குள் செல்ல அளிக்கப்பட்ட அனுமதியும் திடீரென ரத்து செய்யப்பட்டது. எனவே, ராகுல் காந்தி பேருந்தின் மீது ஏறி நின்று உரையாற்றினார். மேலும், காங்கிரஸ் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, காங்கிரஸ் கட்சியினர் சாலையின் இரும்புத் தடுப்புகளை சேதப்படுத்தப்படுத்தினர். இதையடுத்து, நடைப்பயணத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட 2 பகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியினர் நுழைவதைத் தடுக்க காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இதனால் மக்களுக்கும் காவல்துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்த காட்சிகளை காங்கிரஸ் கட்சியின் இளைஞரணித் தலைவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதையடுத்து, அந்தப் பதிவுக்கு பதிலளித்து அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அப்பதிவில், “இது நக்சலைட்களின் தந்திரம். பொதுமக்களை தனது பேச்சுக்களால் தூண்டிவிட்ட உங்கள் தலைவர் ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்க அஸ்ஸாம் டி.ஜி.பி.க்கு அறிவுறுத்தி இருக்கிறேன். மேலும், இது அஸ்ஸாமின் காலாச்சரமல்ல, முழுவதும் அந்நியமானது.
உங்களது உண்மையற்ற தன்மையாலும், ஒப்புக்கொள்ளப்பட்ட வழிகாட்டுதல்களை மீறியதாலும் கௌகாத்தியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.