மேற்கு வங்கத்தில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என அம்மாநில முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளது இண்டி கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க முதலமைச்சசர் மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “நான் காங்கிரஸ் கட்சியுடன் எந்த விவாதமும் செய்யவில்லை. வங்காளத்தில் தனித்து போட்டியிடுவோம் என்று தொடர்ந்து கூறி வருகிறேன். நாட்டில் என்ன நடக்கும் என்பது பற்றி எனக்கு கவலை இல்லை.நான் பல திட்டங்களை கொடுத்தேன். ஆனால் அவர்கள் ஆரம்பத்தில் இருந்தே நிராகரித்தனர்.
ராகுல் காந்தியின் யாத்திரை வங்காளத்தின் வழியாக செல்வது குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை .நான் இண்டி கூட்டணியில் அங்கம் வகித்தாலும், மரியாதை நிமித்தமாக கூட மேற்கு வங்காளத்திற்கு வரப்போவதாக அவர்கள் என்னிடம் தெரிவிக்கவில்லை. மாநில கட்சிகள் தனித்து போட்டியிட அனுமதிக்க வேண்டும். அவர்கள் தலையிடக்கூடாது என மம்தா பானர்ஜி கூறினார்.
மேற்கு வங்கத்தில் உள்ள 42 மக்களவைத் தொகுதிகளில் மூன்று தொகுதிகளை காங்கிரசுக்கு வழங்க திரிணாமுல் காங்கிரஸ் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. 2019 தேர்தலில் காங்கிரஸ் இரண்டு மக்களவை தொகுதிகளிலும், திரிணாமுல் காங்கிரஸ் 22 இடங்களிலும் வெற்றி பெற்றது.
மம்தா பானர்ஜியின் இந்த அறிவிப்பின் மூலம், இண்டி கூட்டணியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் மேற்கு வங்காளத்தில் காங்கிரசுக்கு கதவுகள் மூடப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது.