உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரின் இன்று 19,000 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மாலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்குச் சென்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை வரவேற்கிறார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே இருக்கின்றன. இந்த சூழலில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று உத்தரப் பிரதேச மாநிலத்துக்குச் செல்கிறார். அங்கு, புலந்த்ஷாஹரில் 19,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
மேலும், இதன் மூலம் தனது தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கி வைக்கிறார். பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் திட்டங்களில் இரயில், சாலை, எண்ணெய், எரிவாயு மற்றும் நகர்ப்புற மேம்பாடு, வீட்டுவசதி உள்ளிட்ட முக்கியமான துறைகளுடன் தொடர்புடையவை என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக, பிரத்யேக சரக்கு வழித்தடத்தில் (DFC) நியூ குர்ஜா – புதிய ரேவாரி இடையே 173 கி.மீ. நீளமுள்ள இரட்டைப் பாதை மின்மயமாக்கப்பட்ட பகுதியை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த 2 இரயில் நிலையங்களில் இருந்தும் சரக்கு இரயில்களை காணொலிக் காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
இந்த புதிய DFC பிரிவு முக்கியமானது. ஏனெனில், இது மேற்கு மற்றும் கிழக்கு சரக்கு வழித்தடத்திற்கு இடையே முக்கியமான இணைப்பை ஏற்படுத்துகிறது. பிரத்யேக சரக்கு வழித்தடப் பாதையில் சரக்கு இரயில்கள் மாற்றப்படுவதால், பயணிகள் இரயில்களின் இயக்கத்தை மேம்படுத்த இந்தப் புதிய பிரிவு உதவும்.
மேலும், மதுரா – பல்வால் பகுதியையும், சிபியானா புசுர்க் – தாத்ரி பகுதியையும் இணைக்கும் 4-வது பாதையையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த புதிய வழித்தடங்கள் தேசிய தலைநகரின் தெற்கு, மேற்கு மற்றும் கிழக்கு இந்தியாவிற்கான இரயில் இணைப்பை மேம்படுத்தும்.
அதேபோல, பிரதமர் மோடி பல்வேறு சாலை மேம்பாட்டுத் திட்டங்களையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். அலிகார் முதல் பத்வாஸ் வரை 4 வழிச்சாலை பணி, மீரட் முதல் கர்னால் வரையிலான எல்லையை விரிவுபடுத்துதல் மற்றும் தேசிய நெடுஞ்சாலையின் ஷாம்லி – முசாபர்நகர் பகுதியை 4 வழிப்பாதையாக்குதல் ஆகியவையும் இத்திட்டங்களில் அடங்கும்.
நிகழ்ச்சியின்போது, இந்தியன் ஆயிலின் துண்ட்லா – கவாரியா பைப்லைனையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். மேலும், கிரேட்டர் நொய்டாவில் ஒருங்கிணைந்த தொழில்துறை நகரத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
மாலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்குச் செல்லும் பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை வரவேற்கிறார். தொடர்ந்து, ஜந்தர் மந்தர், ஹவா மஹால் மற்றும் ஆல்பர்ட் ஹால் அருங்காட்சியகம் உள்ளிட்ட பல்வேறு கலாச்சார மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களை அதிபர் இம்மானுவேல் மேக்ரோனுடன் இணைந்து பிரதமர் மோடி பார்வையிடுகிறார்.