இந்தியாவில் 75-வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றி வைத்து, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.
குடியரசு தின விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் நாட்டு அதிபரான இம்மானுவேல் மேக்ரான் கலந்துக்கொண்டார். இந்திய விமானப் படையின் வான் சாகசங்களில் பிரெஞ்சு விமானப் படையின் 3 போர் விமானங்களும் இணைந்தன.
இந்த விழாவின் ஒரு பகுதியாக நாட்டின் பன்முகக் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் அலங்கார ஊர்திகள், முப்படைகளின் வாகன அணிவகுப்பு, விமானப்படையின் சாகசங்கள் மற்றும் ராணுவ பலத்தை பறைசாற்றும் வகையில் அணிவகுப்பு ஆகியவை நடைபெற்றன.
இந்திய வரலாற்றில் முதன்முறையாக குடியரசு தின நிகழ்ச்சியில் முப்படை பெண் வீரர்கள் அணிவகுப்பு நடைபெற்றது. ராணுவ காவல்துறையின் கேப்டன் சந்தியா இந்த குழுவை தலைமை தாங்கினார்.
டெல்லியில் உள்ள போர் நினைவிடத்தில் போரில் மறைந்த வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
டெல்லி கடமைப் பாதையில் அணிவகுப்பு மரியாதையில் மங்கள வாத்திய இசையை இசைத்தபடி பெண்கள் அணிவகுத்தனர். இந்திய இசைக் கருவிகளுடன் 100 பெண்கள் இந்த அணிவகுப்பில் பங்கேற்றனர்.
விமானப் படையில் மகளிர் சக்தியை வெளிப்படுத்தும் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் சென்றது.
எல்லை பாதுகாப்பு படையின் பெண்கள் பிரிவின் கம்பீர அணிவகுப்பு நடைபெற்றது. இதில் பேண்ட் மாஸ்டர் சப் இன்ஸ்பெக்டர் ருயாங்குனுவோ கென்ஸ் தலைமை தாங்கினார்.
தமிழகத்தின் அலங்கார ஊர்தியில் குடவோலை முறை காட்சிப்படுத்தப்பட்டது. குடவோலை முறை என்பது, மக்கள் தகுதியானவர்களை தேர்வு செய்ய அவர்களது பெயர்களை ஓலைச்சுவடிகளில் எழுதி போட்டு, ஒரு குழந்தையை வைத்து குலுக்கல் முறையில் தேர்வு செய்வார்கள். இந்த குடவோலை முறையானது சோழர்களின் ஆட்சி காலத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது.
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இயங்கி வரும் இமா கீதெல் சந்தை தொடர்பான காட்சிகளும் அலங்கார ஊர்தியில் இடம்பெற்றன. மணிப்பூர் மாநில ஊர்தியை பொறுத்தவரை பெண்கள் சக்தியை கொண்டாடுவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது.
உத்தரப்பிரதேச மாநிலம் சார்பில் ராமர் அலங்கார ஊர்தி காட்சிப்படுத்தப்பட்டது. வில் அம்புடன் குழந்தை வடிவ ஸ்ரீ ராமர் நிற்பது போன்ற காட்சி அந்த அலங்கார ஊர்தியில் இடம் பெற்றிருந்தது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் சார்பாக அலங்கார ஊர்தியில் ‘சந்திரயான்-3’ விண்கல மாதிரி சென்றது. ‘சந்திரயான்-3’ சந்திரனின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது, ‘சிவ சக்தி பாயிண்ட்’ என பெயரிடப்பட்ட இடம் ஆகியவை இஸ்ரோ ஊர்தி இடம்பெற்றது.