சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களுக்கு இலவசமாக பேருந்து சேவை வழங்க வேண்டும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்குமாறு கேரள மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது..
கேரள மாநிலம் சபரிமலையில் அமைந்திருக்கும் ஐயப்பன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு மாலை அணிந்து வருகை தருகிறார்கள்.
சபரிமலைக்கு வரும் பக்தர்களின் நலன் கருதி, நிலக்கல் முதல் பம்பை வரை சுமார் 22 கிலோ மீட்டர் தூரத்துக்கு இலவச பேருந்து சேவை வழங்க வேண்டும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் 2023 ஏப்ரல் மாதம் 13-ம் தேதி அம்மாநில உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், இந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து வி.ஹெச்.பி. சார்பில் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
அப்போது, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வி.சிதம்பரேஷ், “கேரள மாநில அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் நிலக்கல் முதல் பம்பை வரை பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால், இப்பேருந்துகள் பழுதடைந்திருப்பதோடு, அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஆகவே, பக்தர்களின் நலன் கருதி மேற்கண்ட பகுதிக்கு இலவச பேருந்து சேவை வழங்க வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறது” என்று கூறினார். இதையடுத்து, மேற்கண்ட வழக்கு தொடர்பாக பதிலளிக்குமாறு கேரள மாநில அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.