75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
75-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அந்த வகையில், டெல்லியில் நடைபெற்ற விழாவில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
இந்நிலையில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆண்டுதோறு ம் குடியரசு தின விழாவை ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழக அரசு சார்பில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, ரகுபதி, தா.மோ.அன்பரசன் ஆகியோர் பங்கேற்றனர்.
அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகளும் தேநீர் விருந்தில் பங்கேற்றனர். அரசியல் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்,உயர் நீதிமன்ற நீதிபதிகள், மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகள் தேநீர் விருந்தில் பங்கேற்றனர்.