தனக்கு எதிராகப் போராட்டம் நடத்திய ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாணவர் பிரிவினரை கண்டித்து கொல்லம் அருகே சாலையில் சேர் போட்டு அமர்ந்து கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் தர்ணாவில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில ஆளுநராக ஆரிப் முகமது கான் இருந்து வருகிறார். இவருக்கும், ஆளும் அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.
இதனால், ஆளுநர் செல்லும் இடங்களில் எல்லாம் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பிரிவான எஸ்.எஃப்.ஐ. அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதன் காரணமாக, சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின்போது தனது உரையில் கடைசி வரியை மட்டும் படித்துவிட்டு ஆளுநர் ஆரிப் முகமது அவையிலிருந்து வெளியேறினார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், ஆளுநர் ஆரிப் முகமது கான், கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரா என்ற இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காகச் சென்றார். அப்போது, எஸ்.எஃப்.ஐ. மாணவர் சங்கத்தினர், ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, காரில் இருந்து இறங்கிய ஆளுநர் ஆரிப் முகமது கான், மாணவர் சங்கத்தினரை பாதுகாப்பது ஏன் என்று போலீஸாரிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். மேலும், போராட்டம் நடத்திய மாணவர்களிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்படி இருந்தும் கோபம் குறையாத ஆளுநர் ஆரிப் முகமது கான், அங்குள்ள டீக்கடை முன்பு சேர் போட்டு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று தெரிவித்து விட்டார்.
மேலும், தான் செல்லும் வழியில் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீஸ் தவறிவிட்டதாக குற்றம்சாட்டிய ஆளுநர், முதல்வர் பினராயி விஜயன் செல்லும் வழியில் போராட்டக்காரர்கள் திரள அனுமதிப்பீர்களா என்று போலீஸாரை நோக்கி கேள்வி எழுப்பினார்.
அதோடு, போராட்டக்காரர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு அளித்து வருகிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் நான் இங்கிருந்து கிளம்ப மாட்டேன். காவல் துறை சட்டத்தை மீறி செயல்பட்டு வருகிறது என்று ஆளுநர் ஆவேசமாக தெரிவித்தார்.
இதனால், செய்வதறியாது தவித்த போலீஸார், ஆளுநரை சமாதானப்படுத்த முயன்றனர். 12 மாணவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவித்த நிலையில், அதனை ஏற்காத ஆளுநர் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
ஆளுநர் தர்ணாவில் ஈடுபட்ட செய்தியறிந்து ஏராளமான பொதுமக்களும் அங்கு குவிந்தனர். ஆளுநரே தர்ணாவில் ஈடுபடும் சம்பவம் கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த பகுதியில் அதிகளவில் காவல் துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.