பீகார் முதல்வர் நிதீஷ்குமார் மீண்டும் பா.ஜ.க.வில் இணையப்போவதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், 2025 சட்டப்பேரவைத் தேர்தலில் பீகாரில் பா.ஜ.க. ஆட்சி அமைப்பது உறுதி என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியிருக்கிறார்.
பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதீஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. 2020 சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த நிதீஷ்குமார், ஆட்சியமைத்த பிறகு கூட்டணி முறித்துக் கொண்டார்.
இதன் பின்னர், காங்கிரஸ், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் இணைந்து ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டார். அதோடு, பா.ஜ.க.வுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள மாநிலக் கட்சிகளை ஒன்று திரட்டி, இண்டி கூட்டணியை அமைக்கக் காரணமாக இருந்தார்.
ஆனால், சமீப காலமாகவே இண்டி கூட்டணி மீது நிதீஷ்குமார் அதிருப்தியில் இருந்து வருகிறார். மேலும், லாலு பிரசாத் தனது இரு மகன்கள் மற்றும் மகளுக்கு அமைச்சர், துணை முதல்வர், எம்.பி. பதவிகளை பெற்றுக் கொண்டதால் மாநில கூட்டணி மீதும் அதிருப்தியில் இருக்கிறார்.
இதனிடையே, தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில், வாரிசு அரசியலை ஒழிக்க வேண்டும் என்று கூறினார். உடனே, தங்கள் குடும்பத்தைப் பற்றித்தான் சொல்கிறார் என்று கருதி லாலுவின் மகள் சமூக வலைத்தளங்களில் நிதீஷ்குமாருக்கு எதிராக கடுமையான பதிவுகளை வெளியிட்டார்.
இந்த சூழலில், முதல்வர் நிதீஷ்குமார் மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இணையப்போவதாக காட்டுத் தீ போல தகவல்கள் பரவி வருகிறது. மேலும், இன்று மாநில ஆளுநரை நிதீஷ்குமார் சந்திக்கச் செல்வதாகவும் தகவல் பரவியால் பீகார் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், பீகார் மாநிலத்துக்குச் சென்றிருக்கும் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “வரும் 2025 சட்டமன்றத் தேர்தலில் பீகாரில் நிச்சயம் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும். அதேபோல, நாடாளுமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க.வுக்குத்தான் மக்கள் நிச்சயம் வாக்களிப்பார்கள்.
மாநிலத்தில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பதைப் பற்றி தெரிந்துகொள்ளவே இங்கு வந்திருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார். அதேசமயம், பீகார் முதல்வர் நிதீஷ்குமார் பா.ஜ.க.வில் சேரப்போவதாகப் பரவி வரும் தகவல் குறித்து எந்தக் கருத்தையும் அவர் தெரிவிக்கவில்லை.