உத்தரப் பிரதேசத்தில் 189 வீரர்களுக்கு 62 கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுத் தொகையை வழங்கிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், பா.ஜ.க. ஆட்சியில் விளையாட்டுத் துறைக்கான பட்ஜெட் 3 மடங்கு உயர்ந்திருப்பதாகத் தெரிவித்தார்.
மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2022, 4-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2022 மற்றும் 37-வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் 2023 ஆகியவற்றில் பங்கேற்று பதக்கம் வென்ற உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 189 சிறந்த வீரர்களுக்கு 62 கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுத் தொகையை இன்று வழங்கினார்.
தலைநகர் லக்னோவில் உள்ள இந்திரா காந்தி பிரதிஸ்தானில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டு, தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற வீரர்களுக்கு, துணைக் காவல் கண்காணிப்பாளர், மாவட்ட இளைஞர் நல அலுவலர் மற்றும் பயணிகள் மற்றும் சரக்கு வரி அதிகாரிகளாக நியமிக்கப்பட்டதற்கான பணி நியமனக் கடிதங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில், மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் பேசுகையில், “புதிய இந்தியாவின் புதிய சித்திரத்தை எழுதி, நாட்டின் மென் சக்தியாக விளங்கும் விளையாட்டின் வலிமையை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். இந்த ஆண்டு நடைபெறும் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் நம் நாட்டு வீரர்கள் பதக்க எண்ணிக்கையின் சாதனைகளை முறியடிப்பார்கள்.
முன்பு உத்தரப் பிரதேச மாநிலத்தில் கலவரங்கள் நடந்தன. தெருக்களில் தோட்டாக்கள் வீசப்பட்டன. ஆனால், தற்போது இளம் துப்பாக்கி சுடும் வீரர்கள் பதக்கங்களை இலக்காகக் கொண்டிருக்கிறார்கள். மாநிலத்தில் விளையாட்டு தொடர்பான உள்கட்டமைப்பை மேம்படுத்தி வீரர்களை ஊக்குவித்ததற்காக முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பாராட்டுகிறேன்.
விளையாட்டு வீரர்களுக்கு அதிக ஊக்கத்தொகை வழங்குவதில் நாட்டிலேயே உத்தரப் பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான போட்டியிலும், உத்தரப் பிரதேசம் முன்னணியில் உள்ளது. மேலும், மாநில அரசு தொடர்ந்து அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்துகிறது.
2014-ம் ஆண்டுக்கு முன்பு விளையாட்டுத் துறையிலும் சர்வ சாதாரணமாக மோசடிகள் நடந்தன. ஆனால், இன்று பதக்கம் வென்றவர்களை பற்றி நாடு பேசுகிறது. இது மத்தியிலிருந்து மாநிலம் வரை காணக்கூடிய மாற்றம்.
‘கேலோ இந்தியா’ பிரச்சாரத்தின் கீழ், பிரதமர் நரேந்திர மோடி முதல் 4 ஆண்டுகளில் 2,800 கோடி ரூபாய் வழங்கினார். இது கடந்த ஆட்சியாளர்களை ஒப்பிடும்போது 3 மடங்கு அதிகமாகும்.
விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, அவர்களுக்கு நிதியுதவி அளித்து வருகிறது. நிதி உதவியைப் பெற்ற பிறகு, வீரர்களும் புதிய சாதனைகளைச் செய்து அதிக பதக்கங்களைக் கொண்டு வருகிறார்கள்” என்றார்.
தொடர்ந்து, கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் யோகி ஆதித்யநாத், “மாநிலத்தின் மக்கள்தொகை நாட்டின் 16 சதவிகிதம். ஆனால், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வென்ற பதக்கங்களில் மாநிலத்தின் பங்கு சுமார் 25 சதவிகிதம். முன்பெல்லாம் பணம் கொடுத்து வேலை வாங்கினார்கள். தற்போது அரசே வேலையும், பணமும் தருகிறது. இது தலைமையின் தொலைநோக்கு பார்வையின் விளைவு.
இந்த பாராட்டு விழா நமது நாட்டின் பெருமையை மீட்டெடுக்கும் ஒரு பகுதியாகும். ஒவ்வொரு மாவட்டத்திலும் தொகுதி அளவில் கேலோ இந்தியா மையம் கட்டப்பட்டு வருகிறது. இதுகுறித்து, உத்தரப் பிரதேசத்தில் தொகுதி அளவிலான வசதிகளை ஏற்படுத்த பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யுமாறு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூரிடம் கோரிக்கை விடுக்கப்படும்” என்றார்.
நிகழ்ச்சியில், மாநில துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மவுரியா, பிரஜேஷ் பதக் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் கிரிஷ் சந்திர யாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இன்று வழங்கப்பட்ட பரிசுத் தொகையின் கீழ், ஆசிய மற்றும் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற வீரருக்கு 3 கோடி ரூபாயும், வெள்ளி வென்ற வீரருக்கு 1.5 கோடி ரூபாயும், வெண்கலப் பதக்கம் வென்ற வீரருக்கு 75 இலட்சம் ரூபாயும் வழங்கப்பட்டது. 2 போட்டிகளிலும் பங்குபெற்ற வீரர்களுக்கு தலா 5 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
7 தங்கப் பதக்கங்கள், 9 வெள்ளிப் பதக்கம், 9 வெண்கலப் பதக்கம் வென்றவர்கள் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற 16 பேர் என மொத்தம் 39 வீரர்களுக்கு 42.5 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டது. பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில், 2 தங்கப் பதக்கங்கள், 5 வெள்ளிப் பதக்கங்கள், 4 வெண்கலப் பதக்கம் வென்றவர்கள் மற்றும் 18 பங்கேற்பாளர்கள் என மொத்தம் 28 வீரர்களுக்கு 17.45 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.
37-வது தேசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற 11 பேருக்கு, ஒற்றையர் ஆட்டத்தில் தலா 6 லட்சம் ரூபாயும், அணி ஆட்டத்தில் தலா 2 லட்சம் ரூபாயும் பகிர்ந்தளிக்கப்பட்டது. 24 வெள்ளி வென்றவர்களுக்கு ஒற்றையர் ஆட்டத்திற்கு ஒரு வீரருக்கு 4 லட்சம் ரூபாயும், அணி ஆட்டத்திற்கு ஒரு வீரருக்கு 1 லட்ச ரூபாயும் வழங்கப்பட்டது.
தேசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற 36 வீரர்களுக்கு ஒரு ஆட்டத்திற்கு தலா 2 லட்சம் ரூபாயும், குழு விளையாட்டிற்கு தலா 50,000 ரூபாயும் வழங்கப்பட்டது. இதன் மூலம் தேசிய விளையாட்டுப் போட்டியில் 122 வீரர்களுக்கு 2.39 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.