பீகார் மாநில அரசியல் கொந்தளிப்புக்கு மத்தியில், லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ் பாஸ்வான்) தலைவர் சிராக் பாஸ்வான், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியிலுள்ள அவரது இல்லத்தில் இன்று சந்தித்து பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
பீகார் மாநில முதல்வராக இருக்கும் நிதீஷ்குமாருக்கும், கூட்டணிக் கட்சியான லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிக்கும் மோதல் போக்கு தொடங்கி இருக்கிறது. லாலுவின் மகன்கள் இருவரில் ஒரு துணை முதல்வராகவும், மற்றொருவர் அமைச்சராகவும் இருக்க, மகள் எம்.பி.யாக இருந்து வருகிறார்.
இதை சுட்டிக்காட்டும் வகையில், வாரிசு அரசியலை ஒழிக்க வேண்டும் என்று நிதீஷ்குமார் கூறினார். உடனே, லாலுவின் மகள், தனது சமூக வலைத்தள பக்கங்களில் நிதீஷ்குமாரை வறுத்தெடுத்தார். இது இரு தரப்பினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதன் காரணமாக, நிதீஷ்குமார் மீண்டும் பா.ஜ.க. கூட்டணிக்கு தாவ இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும், நாளை காலையில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாகவும், தொடர்ந்து மாலையில் பா.ஜ.க. ஆதரவுடன் பதவியேற்கப் போவதாகவும் கூறப்பட்டு வருகிறது.
இப்படி பீகார் அரசியலில் அனல் தெறிக்கும் நிலையில், அம்மாநிலத்தைச் சேர்ந்த பிரதானக் கட்சிகளில் ஒன்றான ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான், இன்று டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்திருக்கிறார்.
இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் நிலையில், செய்தியாளர்களை சந்தித்த சிராக் பாஸ்வான், “இன்று பீகாரில் என்ன நடக்கிறது என்பதை அறிவது முக்கியம் . இந்த விவகாரம் தொடர்பாக அமித்ஷா மற்றும் ஜெ.பி.நட்டா ஆகியோருடன் நான் இன்று ஒரு சந்திப்பை நடத்தினேன்.
அப்போது, பீகார் தொடர்பான எனது கவலைகளை அவர்கள் முன் வைத்துள்ளேன். பல்வேறு விவகாரங்களில் அவர்கள் உத்தரவாதம் அளித்துள்ளனர். கூட்டணி குறித்து மிகவும் சாதகமான சூழ்நிலை உள்ளது. வரும் நாட்களில் நிலைமை மேலும் தெளிவாகும். அதன் பிறகு, எங்கள் கட்சி ஒரு நிலைப்பாட்டை எடுக்கும். இன்று நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.
இதனிடையே, பீகார் தலைநகர் பாட்னாவில் பாரதிய ஜனதா கட்சியின் மத்தியக் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில், பீகார் எதிர்கட்சித் தலைவரும் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுமான விஜய் குமார் சின்ஹா, மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், பா.ஜ.க. எம்.பி.யும் பீகார் முன்னாள் துணை முதல்வருமான சுஷில் குமார் மோடி, மத்திய அமைச்சர் நித்யானந்த் ராய், பா.ஜ.க. பீகார் மாநிலத் தலைவர் சாம்ராட் சவுத்ரி ஆகியோர் பங்கேற்றிருக்கிறார்கள்.
இது ஒருபுறம் இருக்க, ஐக்கிய ஜனதா தளத்தின் முன்னாள் தலைவர் ராஜீவ் ரஞ்சன் (லாலன்) சிங் இன்று பாட்னாவில் உள்ள பீகார் முதல்வர் நிதீஷ்குமாரின் இல்லத்திற்கு வந்தார். மேலும், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் இல்லத்துக்கு ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி.) கட்சியின் தலைவர்கள் பலர் வந்தனர்.
விஜய் குமார் மண்டல், லலித் குமார் யாதவ், அப்துல் பாரி சித்திக், பீகார் சட்ட அமைச்சர் ஷமிம் அகமது மற்றும் பினோத் ஜெய்ஸ்வால் ஆகியோர் பாட்னாவில் உள்ள பீகார் துணை முதல்வரின் இல்லத்திற்குச் சென்றனர்.
இதுகுறித்து ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் கே.சி.தியாகி கூறுகையில், “காங்கிரஸின் பொறுப்பற்ற மற்றும் பிடிவாதமான அணுகுமுறையால் இண்டி கூட்டணி உடையும் நிலையில் உள்ளது” என்று கூறியிருக்கிறார்.
இதன் மூலம் பீகாரில் இண்டி கூட்டணி உடைவது உறுதி என்பது தெளிவாகத் தெரிகிறது.