குடியரசு தின விழா கலை நிகழ்ச்சியில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நமது நாட்டை தவறாக சித்தரித்து அவமதித்த புகாரில் கேரள உயர் நீதிமன்ற அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கின்றனர்.
நாட்டின் 75-வது குடியரசு தினம் நேற்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அந்த வகையில், கேரள மாநிலம் எர்ணாகுளத்திலும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, உயர் நீதிமன்ற ஆடிட்டோரியத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில் ‘ஒரே நாடு, ஒரே கண்ணோட்டம், ஒரே இந்தியா’ என்ற தலைப்பில் நீதிமன்ற ஊழியர்கள் கலை நிகழ்ச்சியை நடத்தினர். இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியையும், தேசத்தையும் தவறாக சித்தரித்ததாக நீதிமன்ற உதவி பதிவாளர் டி.ஏ.சுதிஷ், நீதிமன்ற உயர்நிலை காப்பாளர் பி.எம்.சுதீஷ் ஆகியோர் மீது பா.ஜ.க. ஆதரவு அமைப்பான பாரதிய அபிபாஷகா பரிஷத் மற்றும் எர்ணாகுளம் சட்டப் பிரிவு ஆகியவை புகார் அளித்தன.
அப்புகாரில், “பிரதமர் நரேந்திர மோடியின் வார்த்தைகள், பாணி ஆகியவற்றைப் போன்று பிரதிபலித்து நாட்டின் நிர்வாகத் தலைவர்களை இழிவுபடுத்தவும், அவமதிக்கவும் மேற்கண்ட நாடகம் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த நாடகம் அரசியல் நோக்கம் கொண்டது மற்றும் இழிவானது, ஆட்சேபிக்கத்தக்கது. மேலும், இது கேரள உயர் நீதிமன்றத்தின் நடத்தை விதிகள் மற்றும் சேவை விதிகளுக்கு முரணானது” என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, இப்புகார் குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு பதிவாளருக்கும் (கண்காணிப்பு), இச்சம்பவம் தொடர்பாக விரிவான விளக்கத்தை சமர்ப்பிக்குமாறு பதிவாளருக்கும் (நிர்வாகம்) தலைமை நீதிபதி ஏ.ஜே.தேசாய் உத்தரவிட்டார். மேலும், விசாரணை மற்றும் ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் உள்ள அதிகாரிகள் இருவரும் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.