உச்ச நீதிமன்றத்தின் வைர விழா கொண்டாட்டத்தை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.
இந்திய உச்ச நீதிமன்றம் 1950 ஜனவரி 28-ம் தேதி, தனியாக எதுவும் கட்டடம் இல்லாததால், நாடாளுமன்றக் கட்டத்தில் திறக்கப்பட்டது. அந்த வகையில், உச்ச நீதிமன்றம் 75-வது வைர விழாவை நாளை கொண்டாடவிருக்கிறது. இவ்விழாவில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “உச்ச நீதிமன்றத்தின் 75-வது ஆண்டைக் குறிக்கும் வகையில், டிஜிட்டல் உச்ச நீதிமன்ற அறிக்கைகள் (டி.ஜி.எஸ்.சி.ஆர்.), டிஜிட்டல் நீதிமன்றங்கள் 2.0 மற்றும் உச்ச நீதிமன்றத்தின் புதிய இணையதளம் உள்ளிட்ட குடிமக்களை மையமாகக் கொண்ட தகவல் மற்றும் தொழில்நுட்ப முயற்சிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். மேலும், இந்த சிறப்பு நிகழ்வில் பிரதமர் மோடி கூட்டத்தில் உரையாற்றுவார்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
டிஜிட்டல் உச்ச நீதிமன்ற அறிக்கைகள் (SCR) உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை நாட்டின் குடிமக்களுக்கு இலவசமாகவும் மின்னணு வடிவத்திலும் கிடைக்கச் செய்யும். டிஜிட்டல் உச்ச நீதிமன்ற அறிக்கைகளின் முக்கிய அம்சங்கள் என்னவென்றால், 1950 முதல் உச்ச நீதிமன்ற அறிக்கைகளின் அனைத்து 519 தொகுதிகளும் (36,308 வழக்குகளை உள்ளடக்கியது), டிஜிட்டல் வடிவத்தில் புக்மார்க் செய்யப்பட்ட திறந்த அணுகலுடன் கிடைக்கும்.
டிஜிட்டல் நீதிமன்றங்கள் 2.0 விண்ணப்பமானது, மின்னணு வடிவத்தில் நீதிமன்றப் பதிவுகளை மாவட்ட நீதிமன்றங்களின் நீதிபதிகளுக்குக் கிடைக்கச் செய்வதற்கான மின் நீதிமன்றத் திட்டத்தின் கீழ் ஒரு சமீபத்திய முயற்சியாகும். இது நிகழ்நேர அடிப்படையில் பேச்சை உரைக்கு மாற்றுவதற்கு செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின்போது உச்ச நீதிமன்றத்தின் புதிய இணையதளத்தையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். புதிய இணையதளம் ஆங்கிலம் மற்றும் இந்தியில் இருமொழி வடிவில் இருக்கும். மேலும், பயனர் நட்பு இடைமுகத்துடன் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.