ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து முன்னாள் தலைமை நீதிபதி உள்ளிட்ட சிலருடன் உயர்மட்டக் குழுவின் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆலோசனை நடத்தினார்.
இந்தியாவில் ஒரே நேரத்தில் நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது.
இக்குழுவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், மாநிலங்களவை முன்னாள் எதிர்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், 15-வது நிதிக் கமிஷனின் முன்னாள் தலைவர் என்.கே.சிங், மக்களவை முன்னாள் பொதுச் செயலாளர் சுபாஷ் சி.காஷ்யம், முன்னாள் தலைமை விஜிலென்ஸ் கமிஷனர் சஞ்சய் கோத்தாரி, மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள்.
இக்குழுவினர் ஏற்கெனவே 3 முறை கூடி ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து விவாதித்தது. மேலும், சட்ட வல்லுனர்களுடனும் கலந்தாலோசித்தது. இந்த சூழலில், “ஒரே நாடு ஒரே தேர்தல்” உயர்நிலைக் குழுவின் தலைவர் ராம்நாத் கோவிந்த், புதுடெல்லியில் இந்திய முன்னாள் தலைமை நீதிபதி யு.யு.லலித், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த விஷயம் தொடர்பாக, அவர்கள் ஆலோசனைகளை வழங்கியதாக சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், அரசியல் கட்சித் தலைவர்களுடன் தனது கலந்துரையாடலைத் தொடர்ந்த ராம்நாத் கோவிந்த், மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியின் தலைவர் தீபக் பாண்டுரங் தவாலிகருடனும் கலந்துரையாடினார்.
மேலும், உயர்நிலைக் குழுவின் 4-வது கூட்டமும் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாநிலங்களவை முன்னாள் எதிர்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத், 15-வது நிதிக் கமிஷன் முன்னாள் தலைவர் என்.கே.சிங், மக்களவை முன்னாள் பொதுச்செயலாளர் டாக்டர். சுபாஷ் சி. காஷ்யப், முன்னாள் தலைமை விஜிலென்ஸ் கமிஷனர் சஞ்சய் கோத்தாரி, மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே ஆகியோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, என்.கே சிங் மற்றும் பிராச்சி மிஸ்ரா இணைந்து எழுதிய ‘தேர்தல் சுழற்சிகளின் மேக்ரோ எகனாமிக் இம்பாக்ட் ஆஃப் ஹார்மோனைசிங் எலெக்டோரல் சைக்கிள்ஸ், எவிடென்ஸ் ஃப்ரம் இந்தியா’ என்ற ஆய்வுக் கட்டுரையின் அடிப்படையில் குழு முன்பு ஒரு விளக்கக்காட்சி அளிக்கப்பட்டது.