ராமர் கோயில் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையை உலகுக்கு உணர்த்துவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். எந்த நாட்டிலும் பெரும்பான்மை சமூகத்தினர் தங்கள் நம்பிக்கை தொடர்பான விஷயத்திற்காக இவ்வளவு காலம் காத்திருந்ததில்லை எனவும் அவர் கூறினார்.
அயோத்தி ராமர் கோயில் தொடர்பாக விவாதம் இன்று மக்களவையில் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று பேசினார். அப்போது, வேறு எந்த நாட்டிலும் பெரும்பான்மை சமூகத்தினர் தங்கள் நம்பிக்கை தொடர்பான விஷயத்திற்காக இவ்வளவு காலம் காத்திருந்ததில்லை என்றார்.
ராமர் கோவில் பிரச்சனையில் பல்வேறு முனைகளில் நீண்ட போராட்டங்களில் பங்கேற்ற அனைவரையும் அவர் பாராட்டினார். ராமர் கோயில் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையை உலகிற்கு எடுத்துக்காட்டியது என்று அவர் தெரிவித்தார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான மக்கள் போராட்டம் 1528 இல் தொடங்கியது. அதற்கான சட்டப் போராட்டம் 1858 இல் தொடங்கியது. இது அனைத்தும் ஜனவரி 22 அன்று முடிவுக்கு வந்தது. இது இந்தியாவின் நம்பிக்கையைப் புதுப்பித்து, பயணத்தின் தொடக்கத்தைக் குறித்தது என அவர் கூறினார்.
மோடி அரசாங்கம் முத்தலாக்கைத் தடைசெய்தது மற்றும் பல வாக்குறுதிகளை நிறைவேற்றியது என்று அவர் தெரிவித்தார்.
இந்தியாவின் கலாசாரத்தை ராமாயணத்தில் இருந்து பிரிக்க முடியாது என்று கூறிய திரு ஷா, பல ஆண்டுகால போராட்டம் ராமர் கோயில் திறப்பு விழாவுடன் முடிவுக்கு வந்தது. ஜனவரி 22 ஆம் தேதி மாபெரும் இந்தியாவின் பயணத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. விஸ்வகுரு (உலகத் தலைவர்) ஆவதற்கான பாதையில் நம்மை அழைத்துச் செல்ல இந்த நாள் மா பாரதி (தாய் இந்தியா) வழி வகுக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கைகள், அபிலாஷைகள் மற்றும் சாதனைகளைக் குறிக்கும் நாள் இது என்றும் அமித் ஷா தெரிவித்தார். ராமர் கோவில் கலாச்சார மறுமலர்ச்சியின் அடையாளம் என்றும் அவர் கூறினார்.பொதுத் தேர்தலுக்குப் பிறகு 2024 இல் மோடி அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.