ஓட்டுக்கு பணம் கொடுத்தால், அதை தொடுவதற்கு கை கூச வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் அண்ணா கூறியதை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சுட்டிக்காட்டி திமுகவினரை சாடினார்.
என் மண் என் மக்கள் பயணம் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று உரையாற்றினார்.
பிரதமர் மோடியின் நல்லாட்சியில், உலகப் பொருளாதாரத்தில் இந்தியா 11வது இடத்தில் இருந்து 5வது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது. வரும் 2028 ஆம் ஆண்டு, மூன்றாவது இடத்துக்கும், அடுத்த 25 ஆண்டுகளில், 2047 ஆம் ஆண்டு, உலகின் முதல் பொருளாதார நாடாகவும் இந்தியா வளர்ச்சி பெறும்.
காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற பல லட்சம் கோடி ஊழல்தான் நமது நாட்டின் வளர்ச்சிக்கு இத்தனை ஆண்டுகளாக எதிரியாக இருந்தது. நமது பிரதமர் மோடி ஆட்சி, ஏழை மக்கள், பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள் முன்னேற்றத்திற்கான ஆட்சி. கடந்த ஒன்பது ஆண்டுகளில், சுமார் 25 கோடி மக்கள் இந்தியாவில் ஏழ்மை நிலையிலிருந்து வெளி வந்திருக்கிறார்கள் என சர்வதேச நிதி ஆணையம் தெரிவித்துள்ளது. நமது பிரதமர் மோடியின் மூன்றாவது ஆட்சியில், இந்தியா உலக வல்லரசு நாடாக மாறுவதற்கு அடித்தளம் இடப்படும்.
ஆனால் தமிழகத்தில், ஐம்பது ஆண்டுகளாகக் குடும்ப ஆட்சி நடக்கிறது. அப்பா மகன் பேரன் என்று இருக்கும் இவர்களுக்கு மக்களின் கஷ்டம் எப்படிப் புரியும்? மக்களுக்கு எப்படி நல்லது செய்ய முடியும்? கோபாலபுரத்தில் ஆரம்பித்த குடும்ப அரசியல், தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் இன்று கரையானைப் போலப் பரவியிருக்கிறது. காஞ்சிபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் வாரிசு அரசியல் கோட்டாவில் அரசியலுக்கு வந்தவர்தான்.
அண்ணாதுரை, கருணாநிதி ஆட்சியில் அமைச்சராக இருந்தவரின் பேரன் என்ற தகுதியைத் தவிர இவருக்கு வேற எந்த தகுதியும் இல்லை. தேர்தலுக்கு முன்பு ஆயிரம் ரூபாய் எல்லா மகளிருக்கும் கொடுப்பதாக சொல்லிவிட்டு அனைவருக்கும் ஏன் கொடுக்கவில்லை என கேட்டதற்கு பாரதப் பிரதமரை மிக கொச்சையாக பேசியவர் இவர். இவரை கண்டித்துப் போராட்டம் நடத்திய தமிழக பாஜக சகோதர சகோதரிகள் மீது பொய் வழக்குகளைப் பதிய செய்தவர்.
காவல்துறையினருக்கு ஒன்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன். உங்கள் கடமை மட்டும்தான் நிரந்தரம். திமுக கையில் இருக்கும் அதிகாரம் நிரந்தரம் இல்லை. உங்களுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரம் எதிர் வரிசையில் அமர்ந்து கேள்வி கேட்பவர்களை ஒடுக்குவதற்கு மட்டுமே பயன்படுத்தினால், இன்று அதிகார வரிசையில் இருப்பவர் நாளை எதிர் வரிசைக்கு வருவார். இன்று எதிர் வரிசையில் இருப்பவர் நாளை அதிகாரத்துக்கு வருவார் என்பதை நீங்கள் உணரவேண்டும்.
திமுக தலைவர் அண்ணாதுரை காஞ்சிபுரத்தில் பிறந்தவர். 1962 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ‘வாக்குகளுக்குப் பணம் கொடுத்தால், அந்த பணத்தை தொடுவதற்கு கை கூச வேண்டும். அந்த பணத்தை பார்ப்பதற்கு கண் கூச வேண்டும். அதை தொடும்போது இதயத்திலே இதுவரை இருந்த நியாய உணர்ச்சிகள் எல்லாம் பொங்கி வழிய வேண்டும் என்று சொன்னார் அண்ணாதுரை.
ஆனால் அவரது திமுக இன்று, திருமங்கலம் மாடல், ஈரோடு கிழக்கு பட்டி மாடல் என மக்களை அடைத்து வைத்து பணம் கொடுத்து வாக்குகள் வாங்குகிறது. இன்று பணம் கொடுக்காவிட்டால், திமுகவினரே திமுகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள்.
வரும் பாராளுமன்றத் தேர்தலில், நேர்மையான நல்லாட்சி வழங்கிக் கொண்டிருக்கும் நமது பாரதப் பிரதமர் மோடிக்கு எதிராக இருக்கும் தலைவர்களுக்கு இருக்கும் ஒரே தகுதி, வாரிசு என்ற ஒரே தகுதிதான். ஊழல், குடும்ப, பண அரசியல் மலிந்து போன திமுக கூட்டணிக் கட்சிகளைப் புறக்கணிப்போம். பாரதப் பிரதமரின் நேர்மையான நல்லாட்சி தொடர, தமிழகம் முழுவதும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்போம் என அண்ணாமலை கேட்டுக்கொண்டார்.