பாலஸ்தீனத்தின் ரஃபா நகர் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், 50 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இந்த நடவடிக்கையின் போது, இரண்டு பணயக்கைதிகளை இஸ்ரேல் இராணுவம் மீட்டது.
பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் நாட்டின் மீது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தினர்.
இதனையடுத்து, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரை இஸ்ரேல் தொடங்கியது. விமானப்படை, கப்பல்படை, தரைப்படை என முப்படைகளையும் ஏவிவிட்டு நடத்தி வரும் தாக்குதலில் காஸா நகரமே உருக்குலைந்து போய்க் கிடக்கிறது. இந்த போரில் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு சரியான பதிலடியை இஸ்ரேல் கொடுத்து வருகிறது. இந்த போரில் தற்போது வரை, 28 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், ரஃபாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், இஸ்ரேலியர்கள் சிலரை பணயக்கைதிகளாக ஹமாஸ் தீவிரவாதிகள் அடைத்து வைத்துள்ளனர். அவர்கள் தப்பி செல்லாமல் இருக்க, அங்கு துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் உள்ளனர். இதை அடுத்து, பணய கைதிகளை மீட்கும் நடவடிக்கையாக ரஃபா நகரில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில், 50-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். மேலும், பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையில், 2 பணயக்கைதிகளை மீட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.