மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கவில்லை என மஹாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த அஜித் கோப்சேட் தெரிவித்துள்ளார்.
அண்மையில் 5 மாநிலங்களைச் சேர்ந்த 56 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் நிறைவு பெற்றது. இதனால், காலியாக உள்ள பதவிகளை நிரப்ப இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளையுடன் முடிவடைய உள்ளது.
இந்த நிலையில், மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்பாளர்களை பா.ஜ.க தேசிய தலைமை அறிவித்துள்ளது. அந்த வகையில், குஜராத் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்பாளராக பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை பா.ஜ.க தலைமை அறிவித்துள்ளது.
இதேபோல், காங்கிரஸ் கட்சியில் இருந்து பா.ஜ.க-வில் இணைந்த அசோக் சவான், மகாராஷ்டிராவில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் முன்னாள் எம்எல்ஏ மேதா குல்கர்னி, அஜித் கோப்சேட் உள்ளிட்டோருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு தன்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதாக மகாராஷ்டிராவை சேர்ந்த அஜித் கோப்சேட் தெரிவித்துள்ளார். “நான் ஒரு சாதாரண கட்சிக்காரன். நான் பரிந்துரைக்கப்படுவது எனக்குத் தெரியாது.
நான் ராஜ்யசபாவுக்கு பரிந்துரைக்கப்படுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. கடந்த 25-30 ஆண்டுகளாக பாஜகவில் இருக்கிறேன். மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறைகளில் பணியாற்ற விரும்புகிறேன் என அவர் தெரிவித்தார்.
1992 ஆம் ஆண்டில், எம்பிபிஎஸ் முடித்த அஜித் கோப்சேட், அயோத்தி ராமஜென்மபூமி கரசேவா இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.