உணவு தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றின் பெரிய உற்பத்தியாளர்களாக செயல்பட்டு, விவசாயிகள் இந்தியாவை தன்னிறைவு அடையச் செய்கிறார்கள் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வேளாண் பொருட்களின் உற்பத்தி மற்றும் தரம் உயர்ந்து வருவதற்கும், 50 பில்லியன் டாலருக்கும் அதிகமான வேளாண் சார்ந்த பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு, மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
கூட்டுறவு நிறுவனமான இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பின் ஒத்துழைப்புடன் உலகளாவிய பருப்பு கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்று உரையாற்றினார்.
கூட்டத்தில் உரையாற்றிய பியூஷ் கோயல்,
இந்தியாவை தன்னிறைவு அடையச் செய்வதற்கும், உணவு தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றின் பெரிய உற்பத்தியாளராக நாட்டை உருவாக்குவதற்கும் இந்திய விவசாயிகள் பெரிய பங்களிப்பை ஆற்றி வருவதாக அவர் கூறினார்.
இது பல்வேறு உணவுப் பொருட்களின் உற்பத்தி மற்றும் தரம் இரண்டிலும் மேம்பாட்டுக்கு வழிவகுத்துள்ளது என்று குறிப்பிட்டார். 50 பில்லியன் டாலருக்கும் அதிகமான வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா மாறியுள்ளது என்று அவர் கூறினார்.
கடந்த பத்தாண்டுகளில் விவசாயிகளின் அர்ப்பணிப்பு மற்றும் திறன்கள் காரணமாக, பருப்பு வகைகள் உற்பத்தி அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்தார். 2014-ம் ஆண்டின் 171 லட்சம் டன்னிலிருந்து 2024-ல் 270 லட்சம் டன்னாக பருப்பு உற்பத்தி 60 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார்.
பாரத் பிராண்ட் குறித்து பேசிய அமைச்சர், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், நாட்டின் விவசாயிகளுக்கு ஆதரவளிக்கவும், மக்களுக்கு நியாயமான விலையில் பருப்பு வகைகள் கிடைப்பதை உறுதி செய்யவும் அரசு இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது என்று கூறினார்.
40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வளர்ந்த நாடுகள் உட்பட பல நாடுகளைத் தாக்கிய உணவுப் பணவீக்கத்திலிருந்து நுகர்வோரை இந்தியா பாதுகாத்துள்ளது என்று அவர் தெரிவித்தார். இந்தியா மிகக் குறைந்த பணவீக்க விகிதங்களைக் கொண்ட சிறந்த நாடாக உள்ளது என்று அவர் கூறினார்.
குறைந்தபட்ச ஆதரவு விலை இன்று நமது விவசாயிகளுக்கு உண்மையான உற்பத்திச் செலவைவிட 50 சதவீத விலை கிடைப்பதை உறுதி செய்கிறது என்றும், அதன் மூலம் வருமானத்தை அளிக்கிறது என்று தெரிவித்தார்.
இந்தியா உலகின் மிகப்பெரிய சிறுதானிய உற்பத்தியாளராகவும், 5 வது பெரிய ஏற்றுமதியாளராகவும் உள்ளது என்றும், சிறுதானியங்களைப் போலவே பருப்பு வகைகளிலும் அரசு கவனம் செலுத்தி வருவதாக குறிப்பிட்டார்.