ராமரை கற்பனை பாத்திரம் என தெரிவித்த காங்கிரஸ் கட்சியினர், தற்போது ஜெய் ஸ்ரீ ராம் என்று வணங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அரியானா மாநிலம் ரெவாரியில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.விழாவில் பேசிய அவர், இந்தியா இன்று உலகில் புதிய உயரங்களைத் தொட்டுள்ளது என்றும், மக்களின் ஆசியால் இது சாத்தியமானது என்றும் கூறினார். ராமர் கற்பனை என்று கூறியவர்களும், அயோத்தியில் கோவில் கட்டப்படுவதை விரும்பாதவர்களும் தற்போது ஜெய் ஸ்ரீ ராம் என்று முழங்குவதாக கூறினார்.
பல தசாப்தங்களாக, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பின் 370 வது பிரிவை ரத்து செய்வதில் காங்கிரஸ் தடைகளை உருவாக்கியதாகவும், அந்தத் தடை தற்போது உடைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
நாடு மற்றும் நாட்டு மக்களின் நலனைக் காட்டிலும் ஒரு குடும்பத்தின் நலனை மேலாக வைத்திருப்பதே காங்கிரஸின் சாதனையாகும். 2014ஆம் ஆண்டு பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு எனது முதல் கூட்டம் ரேவாரியில் நடைபெற்றது.
பிரதமர் வேட்பாளராக நான் சில உத்தரவாதங்களை அளித்திருந்தேன். அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று நாடு விரும்பியது.அது நிறைவேறிவிட்டது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி கைப்பற்றும் என மக்கள் கூறுகிறார்கள். மக்களின் ஆசீர்வாதத்தால் கடந்த ஆண்டு ஜி-20 மாநாட்டை இந்தியா வெற்றிகரமாக நடத்த முடிந்தது.
மக்களின் ஆசீர்வாதம் காரணமாக 10 ஆண்டு கால ஆட்சியில் பதினொன்றாவது இடத்தில் இருந்த இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது. வரும் ஆண்டுகளில் இந்தியாவை மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்ற உங்கள் ஆசிகள் தேவை. தற்போது மோடியின் உத்தரவாதம் பற்றி உலகம் முழுவதும் நிறைய பேசப்படுகிறது, மேலும் “மோடியின் உத்தரவாதத்திற்கு ரேவாரி தான் முதல் சாட்சி என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.