ஐ.எஸ். இயக்கத்திற்கு ஆதரவளிக்கும் நபர்களை தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்ட அரபிக் கல்லுாரி பேராசியர் சையது அப்துல் ரகுமான் உமரி மற்றும் முன்னாள் மாணவர்கள் முகமது உசேன் பைசி, இர்ஷாத் மற்றும் ஜமீல் பாஷா உமர் ஆகியோரை கைது செய் துள்ளது தேசிய புலனாய்வு முகமை. தமிழக மாநிலம் முழுதும் ரகசிய கூட்டங்கள் நடத்தி, ஐ.எஸ்., அமைப்புக்கு ஆட்களை சேர்த்து, நிதி திரட்டுதல், வெடிகுண்டு தயாரிப்பு தொடர்பாகவும் வகுப்புகளை எடுத்துள்ளனர் என்கிற செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
மேலும், ஒரு ஊருக்கு ஐந்து பேரையும் அதில் ஒருவரை தலைவராகவும் நியமித்து, தொடர்புக்கு சங்கேத மொழியை பயன்படுத்தி வந்துள்ளனர். ஐ.எஸ்.அமைப்பு ரகசிய கூட்டங்கள், அரபிக் கல்லுாரியில்தான் நடந்துள்ளன.
ஆனால், இவ்வளவு நடந்தும் தமிழக நுண்ணறிவு பிரிவுக்கு தகவல் தெரியவில்லையா? அப்படி தெரிந்திருந்தால் நடவடிக்கை எடுக்காததது ஏன் என தமிழக காவல் துறை விளக்க வேண்டும். தமிழகம் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளின் கூடாரமாகி வருகிறது என நாம் தொடர்ந்து கூறி வருவது உறுதியாகிறது.
இந் நிலையில், தமிழக அரசு, கோவை குண்டு வெடிப்பு வழக்கு குற்றவாளிகளை விடுவித்திருப்பது பயங்கரவாத செயல்களை செய்ய முனைபவர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும் என்றால் மிகையாகாது.
பயங்கரவாதத்திற்கு மதம் இல்லை என்று ஓலமிட்டு கொண்டிருந்தவர்கள் இனியும் அதே பல்லவியை பாடுவார்களா? ஓட்டுக்காக பயங்கரவாதத்தை சமரசம் செய்து கொள்ளும் தமிழக அரசியல்வாதிகள், நிகழ்ந்து கொண்டிருக்கும் பயங்கரத்தை உணராமல் இருந்தால் பெரும் சீரழிவை ஏற்படுத்தும் என்பதை உணர வேண்டும்.
நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து ஐ.எஸ். இயக்கத்திற்கு ஆதரவளிக்கும் நபர்களை தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். இந்த நபர்களுக்கு ஆதரவளிக்கும் அரசியல் கட்சிகள் தடை செய்யப்பட வேண்டும். அரசியல்வாதிகள் தண்டிக்கப்பட வேண்டும் தெரிவித்துள்ளார்.