இந்தியா வெளிநாடுகளைச் சார்ந்திருப்பதைக் குறைத்து வருவதாகவும், வெளிநாடுகளில் இருந்து பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான எண்ணெய், உரங்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லாத இந்தியாவை எதிர்காலத்தில் காண்போம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் நிலுவையில் இருந்த பணிகளை தைரியம் காட்டி முடித்தோம். அயோத்தியில் ராமர் கோவில் கட்டியதன் மூலம் 5 நூற்றாண்டுகளின் காத்திருப்புக்கு முடிவு கட்டினோம் என தெரிவித்தார்.
கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் பெண்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு பாஜக அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பது பெருமையாக உள்ளது.
இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் நோக்கத்தில் பணியாற்றி வருகிறோம். இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றும் உறுதியை எடுத்துள்ளோம், இது மோடியின் உத்தரவாதம் என அவர் தெரிவித்தார்.
இந்தியா இன்று பெரிய இலக்குகளை நிர்ணயித்து வருகிறது. 2029-ம் ஆண்டு யூத் ஒலிம்பிக்கிற்கு நாங்கள் தயாராகி வருகிறோம். 2036-ல் நமது நாட்டில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு நாங்கள் உழைத்து வருகிறோம்.
இந்தியா வெளிநாடுகளைச் சார்ந்திருப்பதைக் குறைத்து வருகிறோம். எனவே நாங்கள் பெரிய இலக்குகளை நிர்ணயித்து உழைக்கிறோம். வெளிநாடுகளில் இருந்து பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான எண்ணெய், உரங்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லாத இந்தியாவை எதிர்காலத்தில் காண்போம்.நமது பாமாயில் திட்டம் நம் விவசாயிகளுக்கு அதிக அதிகாரம் அளிக்கும் வகையில் நாட்டை காப்பாற்றும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்தியா 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற சுமார் 60 ஆண்டுகள் ஆனது. 2014 இல், எங்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியபோது, 2 டிரில்லியன் மார்க் கூட கடினமாகத் தோன்றியது, ஆனால் 10 ஆண்டுகளில் நமது பொருளாதாரத்தில் 2 டிரில்லியன் டாலர்களை கூடுதலாகச் சேர்த்தோம். இந்தியாவின் பொருளாதாரத்தை 5-வது இடத்திற்கு கொண்டு வர 10 ஆண்டுகள் மட்டுமே எடுத்துக் கொண்டோம் என பிரதமர் குறிப்பிட்டார்.
பா.ஜ.க. கூட்டணி 400-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றும் என எதிர்கட்சிகள் பேசுகின்றன. நாம் தேர்தல் வெற்றிக்கு கடினமாக உழைக்க வேண்டும். முதல் முறை வாக்காளர்கள் உள்ளிட்ட அனைவரின் நம்பிக்கையையும் நாம் ஈட்டியாக வேண்டும்.18 வயதை எட்டிய இளைஞர்கள், நாட்டின் 18வது மக்களவையை தேர்ந்தெடுக்கப் போகிறார்கள். அனைவரின் நம்பிக்கையையும் பெற வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
மக்களவை தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ளது. ஆனால், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தில் தங்கள் நாட்டிற்கு வருமாறு பல வெளிநாடுகள் எனக்கு அழைப்பு விடுத்து உள்ளன. இதற்கு அர்த்தம் என்ன? பா.ஜ., அரசு தான் மீண்டும் ஆட்சிக்கு வரும் என உலக நாடுகளும் நம்பிக்கையில் உள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.