மக்களவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலான குழுவினர் பீகாரில் 3 நாள் ஆய்வு செய்கின்றனர்.
2024 மக்களவை தேர்தலுக்கான முன்னேற்பாட்டு பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தேர்தல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மக்களவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை குறித்து ஆய்வு செய்வதற்காக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணையக் குழு இன்று பாட்னா மாலை செல்கிறது.
இந்த பயணத்தின் போது பாதுகாப்பு அம்சங்கள்,வாக்குச்சாவடிகள்,வாக்காளர் பட்டியல், தொலைதூரப் பகுதிகளில் தொலைத்தொடர்பு இணைப்பு, வாக்காளர் விழிப்புணர்வு SVEEP பிரச்சாரம் மற்றும் சட்டம் ஒழுங்கு உள்ளிட்டவை தொடர்பாக அக்குழுவினர் ஆய்வு செய்வார்கள்.
முதல் நாளில், பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளை ஆய்வு செய்ய, தலைமை தேர்தல் அதிகாரி (CEO), மாநில டிஜிபி மற்றும் ஜார்கண்ட் மத்திய போலீஸ் படைகளின் நோடல் அதிகாரி ஆகியோருடன் கலந்துரையாடல் நடைபெறுகிறது.
இதனைத்தொடர்ந்து மாநிலத்தின் தேசிய மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளுடனான கூட்டம் நடைபெறுகிறது. அன்றைய தினம் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டமும் நடைபெறவுள்ளது. இதில் எஸ்பிக்கள், கமிஷனர்கள் மற்றும் பல்வேறு மண்டலங்களின் இன்ஸ்பெக்டர் ஜெனரல்களும் பங்கேற்கின்றனர்.
பயணத்தின் கடைசி கட்டத்தில், குழு மீண்டும் பீகார் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் பீகார் மத்திய போலீஸ் படைகளின் நோடல் அதிகாரியுடன் ஆலோசனை நடத்துகிறது. அதேபோல் பீகார் மாநில தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபியுடன் தலைமை தேர்தல் ஆணைய குழுவினர் ஆய்வுக் கூட்டத்தை நடத்துகின்றனர்.