பாரதத்தை முதலீட்டுக்கான சிறந்த இடமாக உலக நாடுகள் பார்ப்பதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் 10 லட்சம் கோடி மதிப்பிலான 14,000 திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். விழாவில் உரையாற்றிய பிரதமர், 2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கும்பமேளா உத்தரப் பிரதேசத்தின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் என தெரிவித்தார்.
வரும் காலத்தில், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளில் அதிக அளவில் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். இன்று நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் வாரணாசி மற்றும் அயோத்திக்கு வர விரும்புகிறார்கள் என்றார்.
மாநிலத்தில் சிறு தொழில் முனைவோர், விமான நிறுவனங்கள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன என்றும் பிரதமர் மோடி கூறினார்.
இந்தியாவில் முதலீட்டு சூழல் குறித்து பேசிய பிரதமர் மோடி, சிறந்த வருவாய்க்கான உத்தரவாதமான இடமாக இந்தியாவை தற்போது உலகம் பார்க்கிறது என்றார். உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்கள் இந்திய அரசின் கொள்கைகள் மற்றும் ஸ்திரத்தன்மையை நம்புகிறார்கள் என்று அவர் கூறினார்.
தேர்தலின் போது மக்கள் புதிய முதலீடுகளைத் தவிர்ப்பதை நாங்கள் அடிக்கடி பார்த்திருக்கிறோம், ஆனால் இன்று இந்தியா இந்த எண்ணத்தையும் உடைத்துவிட்டது. உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள் தனது அரசாங்கத்தின் கொள்கைகளின் ஸ்திரத்தன்மையில் முழு நம்பிக்கை வைத்துள்ளனர் என்றார்
இரட்டை இயந்திர அரசாங்கத்தின் கீழ், உத்தரப்பிரதேச மாநிலம் சிவப்பு கம்பள கலாச்சாரத்திற்கு மாறியுள்ளது என்றார். இந்த காலகட்டத்தில், உத்தரப்பிரதேசத்தில் குற்ற விகிதங்கள் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளதாகவும், வர்த்தகம் மற்றும் வணிக வாய்ப்புகளில் கணிசமான அதிகரிப்பை சந்தித்துள்ளதாகவும் பிரமர் மோடி தெரிவித்தார்.
சுற்றுலா செல்பவர்கள் உள்ளூர் பொருட்களை வாங்குவதற்கு அவர்களின் பட்ஜெட்டில் 10 சதவீதத்தை ஒதுக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.