தமிழகத்தில் ஒரு சிறிய சுரங்கப் பாதை கட்ட 17 ஆண்டுகள் ஆவதாகவும், அந்த வேகத்தில் பங்காளி கட்சிகள் தமிழக அரசை நடத்தி வருவதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருநீர்மலை நீர்வண்ணப் பெருமாள் குடிகொண்டிருக்கும் பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியில் என் மண் என் மக்கள் பயணம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், பல்லாவரத்தில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் 23 பழமையான இடங்கள் இருப்பதால், 2014 ஆம் ஆண்டு வரை, சுமார் 10,000 குடும்பங்கள், இந்த இடங்களில் இருந்து 300 மீட்டர் தொலைவில் உள்ள தங்கள் இடங்களை விற்கவோ, விரிவாக்கம் செய்யவோ முடியாமல் இருந்தனர். நமது திரு. பொன்னார் அவர்கள் மத்திய அமைச்சராக இருந்தபோது, அதனை 100 மீட்டர் தொலைவாகக் குறைத்து, இந்தப் பகுதி மக்களுக்கு உதவி செய்தார் என்பதில் எங்களுக்குப் பெருமை.
குரோம்பேட்டை, ராதா நகர் ரயில்வே கேட் அமைந்துள்ள பகுதியை, தினமும் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பயன்படுத்துகின்றனர். ரயில்வே கேட்டை மூடும்போது, ஜி.எஸ்.டி., சாலை மற்றும் ராதா நகர் சாலையில், வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் கேட் பகுதியில், 2007ல் சுரங்கப்பாதை பணிகள் துவக்கப்பட்டன. 17 ஆண்டுகள் கடந்தும் இன்னும் பணிகள் முடியவில்லை. ஒவ்வொரு நலத்திட்டங்களிலும் ஆமை வேகத்தில் செயல்படும் திராவிடக் கட்சிகள் தமிழகத்தில் ஆமை அரசை நடத்திக் கொண்டிருக்கின்றன.
கடந்த 2015ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் திட்டத்திற்குத் தேவையான, 222.49 ஏக்கர் நிலத்தை, ஐந்து வருடங்களுக்குப் பிறகு, 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தான் ஒப்படைத்தது தமிழக பங்காளி அரசு. அறிவிப்பு கொடுத்து நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு 5 ஆண்டுகள் எடுத்துக்கொண்டதால், கட்டுமான பணிகளின் மொத்த மதிப்பு ரூ.700 கோடியாக உயர்ந்தது. இந்தியாவில் எந்த ஊரிலும் இல்லாத தாமதம் தமிழகத்தில் மட்டும் ஏன் என்றால், இங்கு ஒரு சிறிய சுரங்கப் பாதை கட்ட 17 வருடங்கள் ஆகிறது. அந்த வேகத்தில் பங்காளி கட்சிகள் தமிழக அரசை நடத்தி வருகின்றன.
பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி மகனும் மருமகளும், வீட்டு வேலை செய்து வந்த பட்டியல் சமூக சகோதரியைக் கடுமையாகத் தாக்கி துன்புறுத்தினர். பாஜக போராடிய பிறகே வழக்கு பதிவு செய்தார்கள். ஜாதி ரீதியாக நடந்த இந்த வன்கொடுமைக்குக் கூட ஆளுங்கட்சி என்பதால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போடப் பார்த்தார்கள். தமிழகத்தில் சாமானிய மக்களுக்கு ஒரு நியாயம். அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு ஒரு நியாயம் என இருக்கிறது.
நேற்றைய தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில், மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்த திட்டங்களைப் பெயர் மட்டும் மாற்றி தங்கள் திட்டங்களைப் போல அறிவித்து மக்களை ஏமாற்றி இருக்கிறது திமுக.
பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், கலைஞரின் கனவு இல்லமாகவும், பிரதமரின் கிராம சாலை திட்டம், முதல்வரின் கிராம சாலை திட்டமாகவும், ஜல்ஜீவன் திட்டம், குழாய் மூலம் குடிநீர் திட்டமாகவும், போஷன் திட்டம், ஊட்டச் சத்தை உறுதி செய் என்ற திட்டமாகவும், பணிபுரியும் பெண்களுக்கான சகி நிவாஸ் விடுதி, தோழி விடுதி என்றும், விஸ்வகர்மா திட்டம், கைவினைஞர் மேம்பாட்டுத் திட்டம் என்றும் பெயரை மட்டும் மாற்றி, மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் நிதியைத் தங்கள் திட்டங்களைப் போலக் காட்டிக் கொள்கின்றனர். மாநில அரசுக்கு மக்கள் செலுத்தும் வரிப்பணம் எல்லாம் எங்கே செல்கிறது?
அதுமட்டுமின்றி, ஒவ்வொரு ஆண்டும் ஒரே அறிவிப்புகளை மீண்டும் மீண்டும் வெறும் அறிவிப்போடு நிறுத்திக் கொள்கிறார்கள். வடசென்னை வளர்ச்சி திட்டம் என ரூ.1000 கோடி இரண்டாவது ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது, 500 மின்சாரப் பேருந்துகள் கொள்முதல் என கடந்த 3 ஆண்டுகளாக நிதி நிலை அறிக்கையில் அறிவித்துள்ளனர்.
அடையாறு ஆற்றை சுத்தம் செய்ய 1500 கோடி ரூபாய் என கடந்த இரண்டு ஆண்டுகளாக அறிவித்துள்ளனர், கோவில் திருப்பணிகளுக்கு ரூ.100 கோடி என கடந்த 3 ஆண்டுகளாக அறிவித்துள்ளனர். ஆனால் இதுவரை, எந்தப் பணிகளும் நடக்காமல் ஒவ்வொரு ஆண்டும் விளம்பரத்திற்காக மட்டுமே அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
பல திட்டங்களுக்கு நிதியே ஒதுக்காமல், புதிய பெயர் வைப்பதோடு, மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறார்கள். முதல்வரின் தாயுமானவர் திட்டம் என்ற பெயரில், நமது பிரதமரின் வறுமை ஒழிப்புத் திட்டத்திற்கு முன்னதாகவே ஸ்டிக்கர் தயார் செய்து வைக்கிறார்கள்.
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் – 7890 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார்களே தவிர இந்த திட்டத்திற்கு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை. சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத் துறையின் கீழ் அறிவிக்கப்பட்ட பூஞ்சோலை திட்டத்திற்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை.
மதுரையில் கட்டப்பட்ட நூலகத்தின் சுவர்கள் ஒரு மழையிலேயே விரிசல் விட்டிருக்கிறது என்ற செய்தி செய்தித்தாள்களில் வெளிவந்தது. கோவையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூலகம் என்ற பெயரில் நிதி ஒதுக்கீடு செய்யாமல் வெறும் அறிவிப்பு மட்டும் செய்திருக்கிறார்கள்.
திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறிய, சமையல் எரிவாயு மானியமாக ஒரு சிலிண்டருக்கு ₹100, 100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவோம் என்ற அறிவிப்பு, கல்விக் கடன் ரத்து, கோவிட் தொற்றுக் காலத்தில் மூடப்பட்ட தொழிற்சாலைகளை மீண்டும் இயங்க வைக்க எளிய தவணைகளில் திரும்பச் செலுத்தக் கூடிய வகையில் கடன் உதவி செய்வதற்கென்று 15,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு குறித்த அறிப்பு பட்ஜெட்டில் இல்லை.இதேபோல் திமுக கொடுத்த 511 தேர்தல் வாக்குறுதிகள் குறித்த எந்த அறிவிப்பும் மூன்றாவது ஆண்டாக பட்ஜெட்டில் இல்லை.
வாழ்த்துக்கள் என்று எழுதச் சொன்னால் வாழ்துகள் என்று எழுதும் 11ஆம் வகுப்பு வரை படித்துள்ள சிறுகுறு நடுத்தர தொழிற்சாலைத் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன், கமிஷன் அடிப்பதில் கில்லி. பல்லாவரம் தொகுதியைப் பொறுத்தவரை, அமைச்சர் தா.மோ. அன்பரசன் அணி, தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி அணி, தாம்பரம் மேயர் அணி எனப் பிரித்து, ஒவ்வொருவரும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சுரண்டிக் கொண்டு இருக்கிறார்கள். திருநீர்மலை ஏரியில் மணல் அள்ளுவது உள்ளிட்ட இவர்கள் செய்யும் அனைத்து முறைகேடுகளும் அடுத்த #DMKFiles ல் வெளிவரும்.
தமிழகத்தில் வண்ண பஞ்சு மிட்டாய்க்குத் தடை விதித்த திமுக அரசு, டாஸ்மாக் சாராயத்துக்கு தடை விதிக்காது. டாஸ்மாக்கிற்கு சாராயம் வழங்குவது, இந்தத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் அன்ஃபிட் டி.ஆர்.பாலுவின் சாராய ஆலையிலிருந்து தான். தொகுதிக்கு எந்த வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளாமல், தனது குடும்பத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறார் அன்ஃபிட் டி.ஆர்.பாலு.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில், ஊழல்வாதிகளுக்கு, குடும்ப அரசியல் செய்பவர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டும். வளர்ச்சிப் பாதையில் நமது நாடு வேகமாகச் செல்ல, முன்னேற்றப் பணிகள் தொடர, தமிழகத்தின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற, நமக்காகப் பாராளுமன்றத்தில் பேசும் உறுப்பினர்கள் வேண்டும். பங்காளிக் கட்சிகள் இத்தனை ஆண்டுகள் தங்களை மட்டும் வளர்த்துக் கொண்டது போதும். வரும் பாராளுமன்றத் தேர்தலில், தமிழகம் முழுவதும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்து, பிரதமர் நரேந்திர மோடி கரங்களை வலுப்படுத்துவோம் என அண்ணாமலை தெரிவித்தார்.