சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ.க தலைமையகத்தில், தமிழக மற்றும் புதுசேரியின் சமூக ஊடகப் பிரிவின் ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில், சிறப்பு அழைப்பாளாராக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், வரும் 20-ம் தேதி போராட்டம் நடத்த வேண்டாம் என மாவட்ட தலைவர்களுடன் சென்று மீனவ சொந்தங்களிடம் கேட்டுக் கொண்டோம். மீனவர்கள் கறுப்புக் கொடி ஏற்றிக் கொண்டு, கடலுக்குள் செல்ல வேண்டாம் என அன்போடு கேட்டுக் கொண்டுள்ளோம்.
அதேவேளையில், கடந்த ஆண்டு, கச்சத்தீவு செல்வதற்கு, இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மீனவச் சொந்தங்கள் சென்று வருவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தோம். குறிப்பாக, கொரோனா காலத்தில் கூட அங்கு சென்று வழிபாடு செய்ய ஏற்பாடு செய்து கொடுத்துள்ளோம். இந்த ஆண்டு அவர்கள் சர்ச்சுக்கு சென்று வழிபாடு செய்வதை அவர்கள் ஏன் புறக்கணிக்க வேண்டும்.
இந்த வருடமும், மீனவச் சொந்தங்களோடு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும். மீனவ சொந்தங்களுக்கு எந்த உதவியாக இருந்தாலும் சரி, அல்லது எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் சரி, அதை தீர்ப்பதற்கு தயாராக உள்ளோம்.
தமிழக வெள்ள நிவாரண நிதியைப் பற்றி நாடாளுமன்றத்தில் பேசியுள்ளனர். அதற்கு மத்திய அமைச்சர்கள் தெளிவான பதிலை கொடுத்துள்ளனர். குறிப்பாக, எஸ்டிஆர்எப் பண்டு பொறுத்தவரைக்கும், எஸ்டிஆர்எப் பண்டு தீர்ந்துபோய்விட்டது எனத் தமிழக அரசு எங்கும் சொல்லவில்லை.
பேரிடர் நடந்து முடிந்தபோது கூட, 450 கோடி, 900 கோடி, பழைய வருட பாக்கி என ஆயிரத்து நூறு கோடியைத்தாண்டி எஸ்டிஆர்எப் பண்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
தி.மு.க அரசு பொது மக்களை ஏமாற்றி வருகிறது. தமிழக மக்களை வஞ்சித்து வருகிறது. பொய்யை மட்டுமே மூலதனமாக வைத்துச் செயல்படுகிறது. அதை வரும் தேர்தலில் அம்பலப்படுத்துவோம். மோடியே மீண்டும் பிரதமராக வரவேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள் என அண்ணாமலை தெரிவித்தார்.