வங்கதேசம், மொரீஷியஸ், பக்ரைன் மற்றும் பூடான் ஆகிய நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது
வெங்காயத்தின் விலை அவ்வப்போது பன்மடங்கு அதிகரித்து வருகிறது. இதனால், சாதாரண மக்கள் பெரும் சிரமத்தைச் சந்திக்கின்றனர். ஆகவே, நுகர்வோரின் சிரமத்தைப் போக்கும் வகையில், விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், உள்நாட்டுச் சந்தைகளில் வெங்காயம் போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்யவும், விலையைக் கட்டுப்படுத்தவும் 2024 மார்ச் மாதம் வரை வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்திருக்கிறது. இதனால், அண்டை நாடுகளில் வெங்காயத்தின் விலை பன்மடங்கு உயர்ந்து காணப்படுகிறது.
இதன் காரணமாக, அண்டை நாடுகள் தங்கள் நாட்டிற்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய அனுமதிக்குமாறு கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில், வங்கதேசம், மொரீஷியஸ், பக்ரைன் மற்றும் பூடான் ஆகிய நான்கு நாடுகளுக்கு 54 ஆயிரத்து 760 டன் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
அதன்படி, வங்காளதேசத்திற்கு 50 ஆயிரம் டன் வெங்காயமும், மொரீஷியஸ் நாட்டிற்கு1,200 டன் வெங்காயமும், பக்ரைன் நாட்டிற்கு 3 ஆயிரம் டன் வெங்காயமும், பூட்டான் நாட்டிற்கு 560 டன் வெங்காயமும் ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார செயலாளர் ரோகித் குமார் சிங் தெரிவித்துள்ளார்.