மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் மனோகர் ஜோஷி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சரும், நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகருமான மனோகர் ஜோஷி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 86. அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், மனோகர் ஜோஷியின் மறைவு வேதனை அளிக்கிறது. மூத்த தலைவரான அவர், பல ஆண்டுகளாக பொது சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். மாநில மற்றும் தேசிய அளவில் பல்வேறு பொறுப்புகளை வகித்தார்.
மகாராஷ்டிரா முதல்வராக இருந்த அவர், மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்தார். மத்திய அமைச்சராகவும் அவர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார். லோக்சபா சபாநாயகராக அவர் பதவி வகித்த காலத்தில், நமது நாடாளுமன்ற செயல்முறைகளை மேலும் துடிப்பாகவும், பங்கேற்பு மிக்கதாகவும் மாற்ற பாடுபட்டார்.
மனோகர் ஜோஷி ஜி ஒரு சட்டமன்ற உறுப்பினராக அவரது விடாமுயற்சிக்காக நினைவுகூரப்படுவார், நான்கு சட்டமன்றங்களிலும் பணியாற்றினார். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.