காங்கிரஸ் தொடர்ந்து ஆட்சியில் இருந்த போதும், நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்ப மறந்து விட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கரில் ‘விக்சித் பாரத், விக்சித் சத்தீஸ்கர் திட்டத்தின் கீழ் ரூ.34,400 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், தேசிய அனல் மின் கழகத்தின் சூப்பர் அனல் மின் திட்டத்தை இன்று நாட்டுக்கு அர்ப்பணித்ததையும், 1600 மெகாவாட் திறன் கொண்ட இரண்டாம் கட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டதையும் குறிப்பிட்ட பிரதமர், தற்போது குறைந்த செலவில் மக்களுக்கு மின்சாரம் கிடைக்கும் என்றார்.
சத்தீஸ்கரை சூரிய மின்சக்திக்கான மையமாக மாற்றுவதற்கான அரசாங்கத்தின் முயற்சியையும் அவர் எடுத்துரைத்தார், மேலும் ராஜ்நந்த்கான் மற்றும் பிலாயில் உள்ள சூரிய மின் நிலையங்களை அர்ப்பணிப்பதையும் குறிப்பிட்டார். அவை இரவில் கூட அருகிலுள்ள பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கும் திறன் கொண்டவை.
“நுகர்வோரின் மின்சாரக் கட்டணங்களை பூஜ்ஜியமாகக் குறைக்க அரசு முயற்சிக்கிறது” என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். தற்போது நாடு முழுவதும் 1 கோடி வீடுகளை உள்ளடக்கிய பிரதமரின் சூரிய சக்தி வீடு இலவச மின்சாரத் திட்டம் குறித்து தெரிவித்தார்.
மேற்கூரை சூரிய ஒளித் தகடுகள் அமைப்பதற்கான நிதி உதவியை அரசு நேரடியாக வங்கிக் கணக்குகளில் வழங்கும், 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்றும், கூடுதலாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை அரசு திரும்ப வாங்கும் என்றும், இதன் மூலம் மக்களுக்கு ஆயிரக்கணக்கான ரூபாய் கூடுதல் வருமானத்தை உருவாக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரஸ் நீண்ட காலம் நாட்டை ஆட்சி செய்தது, ஆனால் அதன் கவனம் அரசாங்கத்தை அமைப்பதில் மட்டுமே இருந்தது, நாட்டின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்பவில்லை என்று ‘விக்சித் பாரத் விக்சித் சத்தீஸ்கர்’ திட்டத்தில் உரையாற்றும் போது மோடி கூறினார்.
அடுத்த ஐந்தாண்டுகளில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் போது, சத்தீஸ்கர் வளர்ச்சியின் புதிய உச்சத்தை எட்டும் என்றார்.
சுதந்திரத்திற்குப் பிறகு நீண்ட காலம் நாட்டை ஆட்சி செய்தவர்கள் அவர்கள் அரசியல் நலன்களை மனதில் வைத்து முடிவுகளை எடுத்தனர். காங்கிரஸ் மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. ஆனால் நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்ப மறந்துவிட்டது, என்று பிரதமர் கூறினார்.
காங்கிரசால் வாரிசு, ஊழல் உள்ளிட்டவற்றை விடுத்து எதையும் சிந்திக்க முடியாது. தங்கள் மகன்கள் மற்றும் மகள்களின் எதிர்காலத்தை உருவாக்குவதில் மட்டும் மும்முரமாக இருப்பவர்களால் உங்கள் மகன்கள் மற்றும் மகள்கள் பற்றி சிந்திக்கவே முடியாது என்றும் பிரதமர் மோடி கூறினார்.
நீங்கள் அனைவரும் மோடியின் குடும்பம். உங்கள் கனவுகள் மோடியின் தீர்மானம். அதனால்தான் இன்று நான் வளர்ந்த இந்தியா மற்றும் வளர்ந்த சத்தீஸ்கர் பற்றி பேசுகிறேன் என பிரதமர் தெரிவித்தார். ஏழைகள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளிப்பதன் மூலம் வளர்ந்த சத்தீஸ்கரை உருவாக்க முடியும், என்றும் மோடி கூறினார்.
சத்தீஸ்கரில் முந்தைய காங்கிரஸ் அரசு ஏழைகளுக்கு வீடுகள் கட்டும் பணியை முடக்கியது. ஆனால் புதிய பாஜக அரசு அதை விரைவுபடுத்தியுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.