பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆழ்கடலில் நீருக்கடியில் சென்று நீரில் மூழ்கிய துவாரகா நகரம் அமைந்துள்ள இடத்தில் பிரார்த்தனை செய்தார்.
குஜராத் மாநிலம் துவாரகாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பாரத பிரதமர் நரேந்திர மோடி, ஒகா பெருநிலப் பகுதியையும், பேட் துவாரகா தீவையும் இணைக்கும் வகையில், சுமார் 980 கோடி ரூபாய் செலவில், கட்டப்பட்ட நாட்டின் மிக நீண்ட பாலத்தை திறந்து வைத்தார்.
பின்னர், ஆழ்கடலில் நீருக்கடியில் சென்று நீரில் மூழ்கிய துவாரகா நகரம் அமைந்துள்ள இடத்தில் பிரார்த்தனை செய்தார். இந்த அனுபவம் இந்தியாவின் ஆன்மீக மற்றும் வரலாற்று வேர்களுடன் ஒரு அரிய மற்றும் ஆழமான தொடர்பை வழங்கியது.
வளமான கலாச்சார மற்றும் ஆன்மீகப் பாரம்பரியமிக்க நீருக்கடியில் உள்ள துவாரகாவுக்கு, மயில் இறகுகளையும் பிரதமர் மோடி காணிக்கையாக வழங்கினார்.
இதுகுறித்து பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது, “நீரில் மூழ்கியுள்ள துவாரகா நகரத்தில் பிரார்த்தனை செய்வது மிகவும் தெய்வீக அனுபவம். ஆன்மீக மகத்துவம் மற்றும் காலத்தால் அழியாத பக்தியின் ஒரு பண்டைய சகாப்தத்துடன் நான் இணைந்திருப்பதை உணர்ந்தேன். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும்” என்று கூறினார்.