தமிழகத்தில் ஆட்சியில் இல்லாவிட்டாலும், பா.ஜ.க.வின் இதயத்தில் தமிழகம் உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த மாதப்பூரில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ‛ என் மண் என் மக்கள் யாத்திரை நிகழ்ச்சி நிறைவு விழா பொதுக்கூட்டம் பல்லடத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்க திறந்த வேனில் வந்த பிரதமர் மோடிக்கு தொண்டர்கள் மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது : ஜவுளித்துறையில் சிறப்பு வாய்ந்த நகரமாக திருப்பூர் உள்ளது.மிகப்பெரிய அளவில் இங்கு கூடியுள்ள மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த பொதுக்கூட்டத்தை பார்க்கும் போது காவிக்கடலை பார்ப்பது போல உள்ளது.
கொங்கு மண் தொழில் துறையில் முக்கிய பங்காற்றி வருகிறது. நாட்டின் வளர்ச்சியில் இந்த பகுதி மிக முக்கியமானது.இங்கு தொழில்துறை வளர்ச்சி பெற்று வருகிறது. காற்றாலை மின்சாரத்தில் முக்கிய பங்கு உள்ளது. தொழில்முனைவோருக்கும் உறுதுணையாக உள்ளது.
பொருளாதாரத்தில் கொங்கு பகுதி மிகப்பெரிய பங்காற்றி வருகிறது.உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இந்தியா விளங்கி வருகிறது.
இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழகம் மாறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.தமிழகம் தேசியத்தின் பக்கம் நிற்பதை இங்கு கூடியுள்ள மக்கள் மூலம் தெரிந்து கொண்டேன். இந்தியாவின் தலையெழுத்தை மாற்றும் வல்லமை தமிழகத்திற்கு உள்ளது. நாட்டின் அரசியல் வளர்ச்சியில் தமிழகம் முக்கிய மையமாக மாறியுள்ளது. தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட செங்கோல் நாடாளுமன்றத்தை அலங்கரிக்கிறது.
காசி தமிழ் சங்கமம், செங்கோல் இவற்றின் வழியாக தமிழுக்கு மரியாதை செலுத்தி வருகிறேன். என்னை பொருத்தளவில் தமிழ் கலாசாரமும், தமிழ் மொழியும் மிக சிறப்பானதாக இருக்கிறது. நாடு தான் முதன்மையானது என பாஜக கருதுகிறது.
டில்லியில் ஏசி அறையில் அமர்ந்துள்ளவர்கள் நாட்டை பிளவுப்படுத்த முயற்சி செய்கின்றனர். அரசை விமர்சனம் செய்கின்றனர். 2024 தமிழகத்தில் அனைவராலும் பேசப்படும் கட்சி பா.ஜ., மட்டும் தான்.
என் மண், என் மக்கள் யாத்திரை தமிழகத்தை ஒரு புதிய பாதையில் எடுத்து செல்கிறது. இந்த யாத்திரையின் பெயர், இந்த மண்ணிற்கும், கட்சிக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்துகிறது. மக்களிடம் நல்ல வரவேற்பை அளித்து உள்ளது. இந்த யாத்திரை தமிழகத்தை புதிய பாதையில் எடுத்துச் செல்கிறது. யாத்திரையை சிறப்பாக நடத்திய அண்ணாமலைக்கு வாழ்த்துகள்.
1991-ல் நான் ஒற்றுமை யாத்திரையை தொடங்கிய போது, கன்னியாகுமரியில் இருந்து தொடங்கினேன். தமிழ் மொழி மிகவும் பழமையானது. பல்வேறு சிறப்புகளை கொண்டது. கன்னியாகுமரி மண்ணை நெற்றியில் பூசிக்கொண்டு என்னுடைய யாத்திரையை தொடங்கினேன்.நாடே முதன்மை என்பது பாஜ.,வின் நிலைப்பாடு. அதன் அடிப்படையில் பாஜ., பாடுபட்டு வருகிறது. தொண்டர்களும் தேசமே பிரதானம் என உழைக்க வேண்டும்.
பா.ஜ.க. மீது தமிழகத்தில் பெரும் நம்பிக்கை வந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் பா.ஜ.க. ஆட்சியில் இல்லாவிட்டாலும் பா.ஜ.க.வின் இதயத்தில் தமிழ்நாடு உள்ளது. தமிழகத்தின் வளர்ச்சிக்காக பா.ஜ.க. முன்னுரிமை கொடுத்து வருகிறது.
2004- முதல் 2014 வரை தமிழகத்திற்கு காங்கிரஸ்- திமுக கூட்டணி அரசு எதுவுமே செய்யவில்லை. இன்று தமிழகம் வந்துள்ள நான் எம்.ஜி.ஆரை நினைத்து பார்க்கிறேன். ஏழைகளுக்கு கல்வி, மருத்துவ வசதி செய்து கொடுத்தவர் எம்.ஜி.ஆர்.; அதனால்தான் அவர் இன்றும் நினைத்து பார்க்கப்படுகிறார். ஜெயலலிதா தமிழ்நாட்டு மக்களோடு எந்த வகை தொடர்பு கொண்டிருந்தார் என்பது எனக்கு தெரியும்.தமிழகத்தில் தி.மு.கவால் அரசியலுக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தை சுரண்டுவதற்காகவே இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளார்கள். காங்கிரஸ் தி.மு.க கூட்டணி தமிழகத்தின் வளர்ச்சிக்கு பாடுபடவில்ல. எம்.ஜி.ஆருக்கு பிறகு ஜெயலலிதா சிறப்பான ஆட்சியை கொடுத்தார்.
இண்டி கூட்டணி தமிழகத்தில் வளர்ச்சி ஏற்படுவதற்கான பணிகளை செய்ய மாட்டார்கள். முத்ரா கடன் வசதி திட்டம் மூலம் தமிழகத்திற்கு 2 லட்சம் கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டத்தால் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு இளைஞர்களும் முன்னேற்றம் அடைந்து வருகிறார்கள் என பிரதமர் மோடி தெரிவித்தார்.