பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்டவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கர்நாடக சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர் கோஷமிட்டதால் கடும் அமளி ஏற்பட்டது.
கர்நாடக சட்டப்பேரப்பேரவையில் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சையத் நசீர் ஹூசேன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது ஆதரவாளர்கள் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என முழக்கம் எழுப்பியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதற்கு முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி. கர்நாடக பா.ஜ.க. மாநில தலைவர் விஜயேந்திரா உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்கட்சியினர் நேற்று பெங்களூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்று காலை கர்நாடக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. அப்போது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் எழுப்பியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார்.