மக்களவை தேர்தல் தொடர்பாக பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்ற பாஜக மத்திய தேர்தல் கமிட்டி ஆலோசனை கூட்டம் நேற்று நள்ளிரவு சுமார் 4 மணி நேரம் நடைபெற்றது.
மக்களவை தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக மத்திய தேர்தல் கமிட்டி கூட்டம் டெல்லியில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. இரவு 10.30 மணிக்கு தொடங்கிய கூட்டம் சுமார் 4 மணி நேரம் நீடித்தது.
இந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.மேலும் குஜராத், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், உத்தரகாண்ட், கோவா உள்ளிட்ட மாநில முதலமைச்சர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் பாஜக வெற்றி பெறுவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும் தேர்தல் அறிக்கை தயாரிப்பு, பிரச்சார வியூகம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
பாஜக வேட்பாளர்கள் 160 பேரின் பெயர்கள் தயாராகி விட்டதாகவும், இந்த வாரமோ அல்லது வார இறுதியிலோ முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.