பிரதமர் மோடி நாளை சென்னை வரும் நிலையில், சுமார் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
பிரதமர் மோடி மார்ச் 4-ந்தேதி (திங்கட்கிழமை) தமிழகம் வருகிறார். தெலுங்கானா மாநிலம் ஆதிலாபாத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர், அங்கிருந்து தனி விமானம் மூலம் மதியம் 1.15 மணி அளவில் சென்னை விமான நிலையம் வருகிறார்.
பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் கல்பாக்கம் அணுமின் நிலையத்துக்கு செல்கிறார். அங்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரூ.400 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள விரைவு எரி பொருள் மறுசுழற்சி உலையை தொடங்கி வைக்கிறார்.
பின்னர் இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு கல்பாக்கத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்னை விமான நிலையத்தை வந்தடைகிறார்.
பிறகு விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்படும் பிரதமர் மோடி மாலை 4.30 மணியில் அளவில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்திற்கு செல்கிறார். அங்கு நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் உரையாற்றுகிறார்.
இதில் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர். சென்னை வரும் பிரதமருக்கு தமிழக பாஜக சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.
பிரதமர் மோடியின் வருகையையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையம், ஒய்.எம்.சி.ஏ. மைதானம், கல்பாக்கம் அணுமின் நிலையம் உள்ளிட்ட இடங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.பிரதமர் வருகையையொட்டி சென்னை மாநகர் முழுவதும் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
சென்னையில் தங்கும் விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.வாகன சோதனையும் நடத்தப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் இருந்து நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானம் வரையில் பிரதமர் மோடி காரில் பயணம் செல்வதால் அந்த வழித்தடத்தில் நாளை பிற்பகலில் தீவிரமாகக் கண்காணிக்க போலீசார் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.