பழங்குடியினப் பெண் நாட்டின் குடியரசுத் தலைவராவார் என்று யாராவது நினைத்திருக்க முடியுமா? என பிரதமர் மோடிபிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
தெலுங்கானா மாநிலம் பெத்தபள்ளியில் NTPCயின் 800 மெகாவாட் (யூனிட்-2) தெலுங்கானா சூப்பர் அனல் மின் திட்டத்தையும், ஜார்கண்டின் சத்ராவில் வடக்கு கரன்புரா சூப்பர் அனல் மின் திட்டத்தின் 660 மெகாவாட் (யூனிட்-2) திட்டம் உள்ளிட்ட ரு.56,000 கோடி மதிப்பிலான திட்ட பணிகளை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
விழாவில் பேசிய பிரதமர் மோடி, இன்று, அனைவரும் இந்தியாவின் வளர்ச்சியின் வேகத்தைப் பற்றி பேசுகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. எங்கள் அரசாங்கம் தெலுங்கானாவில் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளது. எங்களைப் பொறுத்தவரை, வளர்ச்சி என்பது விளிம்புநிலை மக்களின் முன்னேற்றம் என தெரிவித்தார்.
தெலுங்கானா உருவாகி 10 ஆண்டுகள் நிறைவடையப் போகிறது. மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற மத்திய அரசு தன்னால் இயன்றவரை முயற்சி செய்து வருகிறது.
சுதந்திரத்திற்குப் பிறகு பல தசாப்தங்களுக்குப் பிறகும், தெலுங்கானா மக்களின் பங்களிப்புக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை. 2014 க்குப் பிறகு, மத்தியில் ஆளும் பாஜக அரசு தெலுங்கானா வளர்ச்சிக்கும், பழங்குடியின மக்களின் கவுரவத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்ததாக தெரிவித்தார்.
பழங்குடியினப் பெண் நாட்டின் குடியரசுத் தலைவராவார் என்று யாராவது நினைத்திருக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பிய பிரதமர், பகவான் பிர்சா முண்டாவின் பிறந்தநாள் தேசிய விழாவாக கொண்டாடப்படுமா? என்றும் வினவினார்.பழங்குடியினரின் மேம்பாட்டிற்காக பாஜக அரசு தனி அமைச்சகத்தை உருவாக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம், 140 கோடி மக்கள் என் குடும்பம் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
800 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட என்டிபிசியின் இரண்டாவது யூனிட்டை திறந்து வைத்துள்ளோம். இது மேலும் விரிவுபடுத்தப்படும். இது தெலுங்கானாவின் எரிசக்தி உற்பத்தி திறன் மற்றும் அது தொடர்பான பிற பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குகிறது என பிரதமர் குறிப்பிட்டார்.
தேசிய நெடுஞ்சாலைகளும் இன்று திறக்கப்பட்டுள்ளன. ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைகள் மூலம் மேம்படுத்தப்பட்ட இணைப்பு தெலுங்கானாவின் வளர்ச்சியின் வேகத்தை மேலும் அதிகரிக்கும். இது பயணத்துக்கான நேரத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையை மேம்படுத்தும். இதன் மூலம் பிராந்தியத்தில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
புதிதாக மின்மயமாக்கப்பட்ட அம்பாரி – அடிலாபாத் – பிம்பால்குடி ரயில் பாதையை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். NH-353B மற்றும் NH-163 மூலம் தெலுங்கானாவை மகாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கருடன் இணைக்கும் இரண்டு பெரிய தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
விழாவில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை, முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.