நாளை அரியானா மாநிலம் செல்லும் பிரதமர் மோடி, ரூ. 1 லட்சம் கோடி மதிப்பில் பல்வேறு மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள 112 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி, நாளை அரியானா மாநிலம் குருகிராமுக்கு பயணம் மேற்கொள்கிறார். நண்பகல் 12 மணியளவில் நடைபெறும் நிகழ்ச்சியில், நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 112 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார்.
டெல்லி மற்றும் குருகிராம் இடையே போக்குவரத்தை மேம்படுத்தவும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் அமைக்கப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க துவாரகா விரைவுச் சாலையின் ஹரியானா பகுதியையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
மேலும் நாடு முழுவதும் பல்வேறு தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். ஆந்திராவில் ரூ.14,000 கோடி மதிப்பிலான பெங்களூரு – கடப்பா – விஜயவாடா விரைவுச் சாலை, கர்நாடகாவில் ரூ. 8,000 கோடி மதிப்பில் தேசிய நெடுஞ்சாலை 748ஏ-இன் பெல்காம் – ஹங்குந்த் – ராய்ச்சூர் பிரிவு உள்ளிட்ட சாலை பணிகளை அடிக்கல் நாட்டியும் தொடங்கியும் வைக்கிறார்.
அரியானாவில் ரூ .4,900 கோடி மதிப்புள்ள ஷாம்லி – அம்பாலா நெடுஞ்சாலையின் மூன்று தொகுப்புகள்; பஞ்சாப்பில் ரூ.3,800 கோடி மதிப்பில் அமிர்தசரஸ் – பதிந்தா வழித்தடத்தின் இரண்டு தொகுப்புகள் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ரூ.32,700 கோடி மதிப்பிலான 39 இதர திட்டங்களும் இதில் அடங்கும்
இந்தத் திட்டங்கள் தேசிய நெடுஞ்சாலைக் கட்டமைப்பின் வளர்ச்சிக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதோடு, சமூக-பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்கும், நாடு முழுவதும் உள்ள பிராந்தியங்களில் வர்த்தகம் மற்றும் வணிக செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கும் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.