முந்தைய ஆட்சியாளர்கள் தேர்தல் முடிந்ததும் வாக்குறுதிகளை மறந்து விடுவார்கள் என எதிர்கட்சியினர் மீது பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் அசம்கார்க்கில் நடைபெற்ற விழாவில் அசம்கர், ஷ்ரவஸ்தி, சித்ரகூட் மற்றும் அலிகார் விமான நிலையங்களையும், லக்னோவில் உள்ள சவுத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.ரூ.108 கோடி செலவில் கட்டப்பட்ட மகாராஜா சுஹேல் தேவ் மாநில பல்கலைக்கழகத்தையும் பிரதமர் திறந்து வைத்தார்.
பின்னர் விழாவில் பேசிய பிரதமர் மோடி, உத்தரபிரதேசத்தில் ‘இரட்டை இயந்திர ஆட்சியைப் பாராட்டினார், மேலும் மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள அசம்கர் மாவட்டம் இனி ‘அஜன்மகர்’ என்று அழைக்கப்படும் என்று கூறினார். ஒரு காலத்தில் பின்தங்கியதாகக் கருதப்பட்ட அசம்கர் இன்று ஒளிரும் நட்சத்திரமாக விளங்கி வருவதாகவும் மோடி தெரிவித்தார்.
ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவின் சமீபத்திய கருத்துக்கு மீண்டும் கண்டனம் தெரிவித்த பிரதமர், 140 கோடி இந்தியர்கள் தமது குடும்பம் என்று கூறினார்.மோடிக்கு சொந்த குடும்பம் இல்லை என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் நாட்டின் 140 கோடி மக்களும் ‘மோடி கா பரிவார்’” என்று பிரதமர் மோடி கூறினார்.
2019-ல் நாங்கள் போட்ட அடிக்கல் தேர்தலுக்காக அல்ல. நாங்கள் அடிக்கல் நாட்டிய அனைத்து திட்டங்களும் வெளிப்படையாக நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. 2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற நான் உழைக்கிறேன் என்று பிரதமர் மோடி கூறினார்.
கடந்த சில நாட்களாக, புதிய விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள்,எய்ம்ஸ் மருத்துவமனைகள் துவக்கி வைப்பதை அறிந்த மக்கள் ஆச்சர்யம் அடைகின்றனர். சிலர் தேர்தல் நேரம் வருவதால் அனைத்தும் தொடங்கி வைக்கப்படுவதாக எண்ணுகின்றனர்.
ஆனால் முன்பு ஆட்சியில் இருந்த தலைவர்கள் மக்களை முட்டாளாக்கும் அறிவிப்புகளை வெளியிடுவார்கள் என்றும், தேர்தல்கள் முடிந்ததும் அதனை மறந்து விடுவார்கள் என மோடி தெரிவித்தார். நாட்டில் தற்போது நடந்து வரும் நகரமயமாக்கல் 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருக்க வேண்டியது. ஆனால், அதனை நாங்கள் வாய்ப்பாக தற்போது செயல்படுத்தி வருகிறோம் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில், 11,500 கோடி மதிப்பிலான ஐந்து பெரிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.3,700 கோடி மதிப்பிலான பிரதம மந்திரி கிராம் சதக் யோஜனா திட்டத்தின் கீழ் 59 உத்தரபிரதேச மாவட்டங்களில் கட்டப்பட்ட 5,342 கிமீ சாலைகளையும் அவர் திறந்து வைத்தார்.