குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ரூ.1200 கோடி மதிப்பிலான சபர்மதி ஆசிரம நினைவுத் திட்டத்தின் மாஸ்டர்பிளானை பிரதமர் மோடி நாளை வெளியிடுகிறார்.
1,200 கோடி பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டுள்ள இந்தத் திட்டம், மகாத்மா காந்தியின் போதனைகள் மற்றும் தத்துவத்தை தற்போதைய மற்றும் வருங்கால சந்ததியினருக்கு எடுத்து செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சபர்மதி ஆசிரமத்தைச் சுற்றியுள்ள உள்கட்டமைப்பைச் சீரமைக்கவும், பார்வையாளர்களுக்கு அதிநவீன வசதிகளை வழங்கவும், தேசத் தந்தைக்கு அர்ப்பணிக்கப்பட்ட உலகத் தரம் வாய்ந்த நினைவிடத்தை நிறுவவும் இந்த லட்சியத் திட்டம் நோக்கமாக உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆற்றின் கரையில் 1917 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி நிறுவிய ஆசிரமத்தின் தற்போதைய ஐந்து ஏக்கர் பரப்பளவு 55 ஏக்கராக விரிவுபடுத்தப்படும் மற்றும் தற்போதுள்ள 36 கட்டிடங்கள் புதுப்பிக்கப்படவுள்ளது.
மகாத்மா காந்தியின் கருத்துக்களைப் பாதுகாக்கவும், பரப்பவும், ஆசிரமத்தின் நூலகம் மற்றும் காப்பகங்களைப் பயன்படுத்துவதற்கு வருகை தரும் அறிஞர்களுக்கு வசதிகளை உருவாக்கவும், ஒரு நூலகம் மற்றும் காப்பகக் கட்டிடம் உருவாக்கப்படவுள்ளது.
இந்த விழாவில் பிரதமர் மோடியுடன் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில், 1915 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்த பிறகு மகாத்மா காந்தியால் நிறுவப்பட்ட முதல் ஆசிரமமான மறுவடிவமைக்கப்பட்ட கோச்ராப் ஆசிரமத்தையும் பிரதமர் திறந்து வைக்கிறார்.