மத்திய அரசின் வளர்ச்சி பணிகள் தேசத்தை கட்டியெழுப்புவதே தவிர, தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அல்ல என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் அகமதாபாத் சபர்மதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 10 புதிய வந்தே பாரத் ரயில்கள் தொடங்குதல் உள்ளிட்ட ரூ.85,000 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த விழாவில் பேசிய பிரதமர், சிலர் எங்களின் முயற்சிகளை தேர்தல் கண்ணோட்டத்தில் பார்க்க முயல்கிறார்கள். நாங்கள் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வது தேர்தலுக்காக அல்ல. தேசத்தை கட்டி எழுப்புவதற்காக தான் என தெரிவித்தார். கடந்த தலைமுறை அனுபவித்த துன்பங்களை தற்போதைய இளைஞர்கள் அனுபவிக்க மாட்டார்கள். இது மோடி அரசின் உத்தரவாதம் என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த 10 ஆண்டுகளில், ரயில்வே மேம்பாட்டிற்காக தனது அரசாங்கம் 6 மடங்கு அதிக தொகையை செலவிட்டதாக பிரதமர் கூறினார்.
2024 ஆம் ஆண்டின் இரண்டு மாதங்களில், 11 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு தொடக்கி வைத்து அடிக்கல் நாட்டியுள்ளோம். எனது வாழ்க்கையை ரயில்வே தண்டவாளத்தில் தொடங்கினேன், எனவே எங்கள் ரயில்வே முன்பு எவ்வளவு மோசமாக இருந்தது என்பது எனக்கு நன்றாக தெரியும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
தனி ரயில்வே பட்ஜெட்டை நிறுத்திவிட்டு, மத்திய பட்ஜெட்டில் சேர்த்துள்ளதாகவும், அதனால் ரயில்வே மேம்பாட்டிற்கு அரசுப் பணம் பயன்படுத்தப்படும் என்றும் மோடி கூறினார். இதுவரை, 350 ‘ஆஸ்தா’ ரயில்கள் மூலம் 4.5 லட்சம் பேர் அயோத்திக்குச் செல்ல வசதி செய்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
















