பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தின் ராஜதந்திரத்திற்கு மிகப்பெரிய வெற்றியைக் குறிக்கும் வகையில் காலிஸ்தான் ஆதரவாளர்களின் 300க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ள பிரிட்டன் அரசு, ரூ. 100 கோடியை பறிமுதல் செய்துள்ளது.
காலிஸ்தான் தீவிரவாத இயக்கத்திற்கு எதிராக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இங்கிலாந்து உயர்மட்ட தலைவர்களுடனான சந்திப்புகளின் போது காலிஸ்தான் சார்பு தீவிரவாதம் குறித்த தனது நீண்டகால கவலைகளை இந்தியா எழுப்பியது.
கடந்த நவம்பர் மாதம், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், இங்கிலாந்து உள்துறைச் செயலர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (என்எஸ்ஏ) டிம் பாரோ ஆகியோரை சந்தித்தார். அப்போது, காலிஸ்தான் சார்பு தீவிரவாதம் குறித்த இந்தியாவின் கவலைகளை அவர் பகிர்ந்து கொண்டார். இதனையடுத்து காலிஸ்தான் விவகாரத்தில் இங்கிலாந்து ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது தெரிகிறது.
அதன் ஒரு பகுதியாக ரிஷி சுனக் தலைமையிலான பிரிட்டன் அரசு காலிஸ்தான் ஆதரவாளர்களின் 300க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 100 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 5,000க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இந்திய தரப்புடன் உளவு தகவல்களை பகிர்ந்து கொள்வதில் பிரிட்டன் அதிக அக்கறை காட்டுகிறது.காலிஸ்தானி குழுக்களுடன் தொடர்புடைய நபர்கள் நீதியை எதிர்கொள்வதை பிரிட்டன் அரசு உறுதிப்படுத்துகிறது. விசாரணைக்காக குற்றம் சாட்டப்பட்ட நபர்களை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.