மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ்,திமுக கூட்டணி முற்றிலும் துடைத்தெறியப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் நரேந்திர மோடி இன்று கன்னியாகுமரி வந்தார். அவரை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் கார் மூலம் அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்ற மோடி அங்கிருந்து பொதுக்கூட்டம் நடைபெறும் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வளாகத்திற்கு சென்றார். அப்போது சாலையின் இருபுறமும் திரண்டிருந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் பாஜகவினர் மலர்களை தூவி பிரதமருக்கு வரவேற்பு அளித்தனர்.
பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர், என் அன்பார்ந்த் தமிழ் சகோதர, சகோதரிகளே வணக்கம் என உரையை தொடங்கினார்.
கன்னியாகுமரியில் இருந்து கிளம்பியுள்ள இந்த அலை நீண்ட தூரம் செல்லும். நாட்டை துண்டாட நினைக்கும் சக்திகளை காஷ்மீர் உள்ளிட்ட மாநில மக்கள் தூக்கி எறிந்து விட்டனர். தற்போது தமிழக மக்களும் அதனை செய்ய காத்திருக்கின்றனர். கன்னியாகுமரியில் எனக்கு கிடைத்த ஆதரவு மற்றும் வரவேற்பை கண்டு எதிர்கட்சியினருக்கு கலக்கம் ஏற்பட்டுள்ளது.
இண்டி கூட்டணியால் தமிழகத்தில் வளர்ச்சி திட்டங்களை முன்னெடுக்க முடியாது. ஆட்சிக்கு வந்து கொள்ளையடிக்க வேண்டும் என்பதே அவர்களின் இலக்கு. 2 ஜி அலைக்கற்றை கொள்ளையில் பெரும் பங்கு வகித்தது திமுக தான். ஜல்லிக்கட்டுக்கு திமுக காங்கிரஸ் கூட்டணி தடை விதித்தது. ஆனால் பாஜக அதனை நீக்கியது.
தமிழகத்தின் எதிர்காலத்துக்கும், கலாச்சாரத்துக்கும் திமுகதான் எதிரி. அயோத்தி ராமர் கோவில் ‘பிரான் பிரதிஷ்டை’ விழாவுக்கு முன், தமிழகம் வந்து, மாநிலத்தில் உள்ள முக்கிய கோவில்களுக்கு சென்று வந்தேன்.
ஆனால், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை ஒளிபரப்புவதை திமுக அரசு நிறுத்த முயன்றது. புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் ஏற்றியது அவர்களுக்கு பிடிக்கவில்லை என தெரிவித்தார்.
பெண்களை ஏமாற்றவும், இழிவுபடுத்தவும் மட்டுமே திமுக, காங்கிரஸ் தொண்டர்களுக்கு தெரியும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் திமுகவினர் எப்படி நடந்து கொண்டனர் என்பது தமிழக மக்களுக்கு தெரியும். பெண்கள் பெயரில் அரசியல் செய்கிறார்கள். பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வருவதற்கான எங்கள் நடவடிக்கை குறித்தும் திமுக தலைவர்கள் கேள்வி எழுப்பினர் என பிரதமர் கூறினார்.
மீனவ மக்களின் நலனுக்காக மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. வ.உ.சி. துறைமுகம், மீனவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக ரூ.15,000 கோடியில் புதிய ரயில்வே திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் துறைமுக கட்டமைப்புகளை மேம்படுத்த மத்திய அரசு பல திட்டங்களை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ரூ.50,000 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை பணிகள் நிறைவடைந்துள்ளது. ரூ.70,000 கோடி மதிப்பீட்டில் நெடுஞ்சாலை பணிகள் நடந்து வருகின்றன. தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சி அகற்றப்பட வேண்டும். வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ்,திமுக கூட்டணி முற்றிலும் துடைத்தெறியப்படும். கன்னியாகுமரியில் இருந்து கிளம்பியுள்ள இந்த அலை நீண்டதூரம் பயணிக்கும்.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருகின்றன.ரயில்வே பணிகளுக்காக ரூ.6,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக மக்களை பாஜக தான் நேசிக்கிறது. திமுக – காங்கிரஸ் கட்சிகள் வஞ்சிக்கின்றன. இண்டி கூட்டணி கட்சிகளின் கர்வத்தை தமிழகம் அடக்கும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.