இரண்டு இரயில் நிறுத்தங்கள் வேண்டும் என தமிழக பாஜகவின் கோரிக்கையை ஒரே நாளில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நிறைவேற்றியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்லவேண்டும் என்றும், மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியில் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தம் ஆகிய கோரிக்கைகளை நிறைவற்றித்தரும்படி சென்னை வந்திருந்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் பாஜக-வின் மாநில செயலாளர் அஸ்வத்தாமன் நேற்று (14.03.2024) அன்று கோரிக்கை வைத்தார். அவரிடம் விஷயங்களை கேட்டறிந்த மத்திய அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
அதன்படி இந்த சந்திப்பின்போது உடனிருந்த ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட மத்திய அமைச்சர் இந்த கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார். இந்த சூழல் இன்று (15-03-2024) இரவே ரயில்வே வாரியம் இந்த கோரிக்கைகளை நிறைவேற்றி அறிக்கை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த அறிவிப்பில், கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் இனி உளுந்தூர்பேட்டையில் நின்று செல்லும், திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் இனி குத்தாலத்தில் நின்று செல்லும் என்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் நின்று செல்கிற தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட ஆண்டுகள் கோரிக்கையான இவை தமிழக பாஜக முயற்சியால் உடனடியாக நிறைவேற்றப்பட்டது, உளுந்தூர்பேட்டை மற்றும் குத்தாலம் பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.